பக்கம்:அகமும் புறமும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 97

‘உறுதியான சொல்லுடையவன்’ என்ற முடிவுக்குத் தலைவி பல நாள் முன்னரே வந்துவிட்டாள்.

சிலரிடம் பழகுவது கரும்பை அடியிலிருந்து தின்பது போல் இருக்கும். அதாவது, முதலில் ‘ஆ! ஹோ!’ என்று பழகிவிட்டு, நாட்கள் செல்லச் செல்ல வெறுப்புத் தட்டும் வகையில் நடந்து கொள்வர். ஒரு சிலர் பழக்கம் அல்லது நட்பு, நாளாக ஆக மிகச் சுவையுடையதாய் இருக்கும். அது கரும்பை நுனியிலிருந்து தின்பதுபோன்று ஆகும். தலைவனுடைய நட்பு அத்தகையதன்றோ? திருமணமாகி இத்துணை நாட்கள் கழித்தும் அந்நட்பில் தினந்தோறும் புதிய இன்பம் அல்லவா காண்கிறாள் தலைவி? ‘நீடுதோறும் இனியன் அவன்’ என நினைக்கிறாள். மேலும், அவளைப் பிரிந்து இருக்க அவனால் முடியாது என்பதையும் பலமுறை அவனே கூறியிருக்கிறான். இதுவரை பிரிந்திருந்ததும் இல்லை அவன்.

அப்படிப்பட்டவன் இப்பொழுதுமட்டும் எவ்வாறு பிரிந்து வாழப் போகிறான்? பிரிதல் என்ற ஒன்று மட்டும் அவன், அவள் இருவருக்குமே இயலாத காரியம். தாமரையில் தேன் நுகர்ந்து சந்தன மரத்தை அடைந்து தேன்கூடு வைக்கும் ஈயைப் போலத் தலைவனும் அவளுடன் இருந்து இன்பம் நுகர்ந்து உயர்ந்ததாகிய ‘இல்லறம்’ என்னும் மணம் அந்த இன்பத்திற்குக் கிடைக்குமாறு செய்துவிட்டான். வெற்றின்பம் ஒன்றையே கருதுபவனாயின், களவில் அனுபவிப்பதுடன் நின்றிருப்பான். ஆனால், இல்லறமாகிய மணத்துடன் கூடிய இன்பமாகிய தேனை அல்லவா அவன் சேகரித்தான்! இந்த ஈக்களைப் பார்த்தவுடன் தலைவிக்குத் தலைவன் செய்கின்ற செயல் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் தோழி உள்ளே இருந்து வெளியில் வந்தாள்; தலைவி குளத்தையும் சந்தன மரத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் நிலைபெற்று