பக்கம்:அகமும் புறமும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 99

அடிகள் விளக்குகின்றன. உலகத்திற்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவிற்கு தலைவன் தலைவிக்கு இன்றியமையாதனவாம்.

காதல் என்பது கேவலம் கடைச்சரக்காக வாங்கப்படும் இந்நாளில் இத்தலைவியின் காதற்பெருமையும் ஆழமும் அறிந்து மகிழ்தற்குரியன. நம் முன்னோர் காதலையே கடவுளை அடையும் வழியாகக் கொண்டனர் என இலக்கியம் பேசுகிறது. காதல் இத்தகையதாய் இருப்பின், ஏன் அது முடியாது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

*****


பொன் வளையல்

தமிழ் இலக்கியத்தில் சாவா இடம் பெற்று வாழும் கவிதைகளில் எல்லாச் சுவைகளையும் (ரசம்) காணலாம். சில இடங்களில் சில சுவைகள் ஆழ்ந்து நோக்கிய வழியே புலனாகும்படி அமைந்துள்ளன. பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம், சுவை எட்டு எனக் கொண்டது; நகை முதலாக உவகை ஈறாக அவற்றிற்குப் பெயர்களும் தந்துள்ளது. (தொல், மெய்ப்பாட்டியல்—3) இதனுள் நகை என்ற முதற்சுவையும் உவகை என்று இறுதியாகக் கூறப்பட்டதும் ஆய்தற்குரியன. உவகை என்பது மகிழ்ச்சி என்றே கூறப்படலாம். ஆனால், மகிழ்ச்சி காரணமாகப் பிறக்கின்ற நகைக்கும் தொல்காப்பியனார் முதற்சுவையாகக் குறிப்பிட்ட நகைக்கும் வேறுபாடு உண்டு. ‘எள்ளல், இளமை, பேதைமை, மடமை’ என்ற நான்கும் காரணமாக நகை தோன்றும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், இதனை மேலைநாட்டுத் திறனிகள் கூறும் ‘Humour’ என்பதனோடு ஒருவாறு ஒப்பிடலாம். ஒருவாறு தான் ஒப்பிடல் கூடுமே தவிர, இவை இரண்டும் ஒன்று என்று நினைந்து யாரும் இடர்ப்படல் வேண்டா. நம்மவர்