பக்கம்:அகமும் புறமும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 • அகமும் புறமும்

கொண்டனர். முதன்முறை இருவரும் சந்தித்துக் களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் பிறகு பல முறையும் சந்திப்பதாகவே உறுதி பூண்டு இருவரும் பிரிந்தனர்.

முதன்முறை அவர்கள் சந்தித்தது ஒருவருக்கும் தெரியாது. விதிதான் தங்களைச் சேர்த்துவைத்தது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால், மறுமுறை சந்திப்பது முதன்முறை போல அவ்வளவு எளிதாய் இல்லை. தோழியின் உதவி இல்லாமல் தலைவனைச் சந்திக்க முடியாது என்பதைத் தலைவி உணர்ந்தாள்; தலைவனும் இதனை நன்கு உணர்ந்தான். எனவே, இருவரும் தனித் தனியே தோழியிடம் பேசி அவளுடைய உடன்பாட்டைப் பெற்றுவிட்டனர்.

நாள்தோறும் வந்தான் தலைவன்; தலைவியைச் சந்தித்தான். ஆனால், அதற்குமேல் அவன் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை. வாழ்நாள் முழுதும் களவொழுக்கத்தில் கழித்துவிடமுடியுமா? அவள் நினைக்கிறாள் முடியாதென்று. ஆனால், அவன் அதுபற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை! குடும்பப் பொறுப்பு இல்லாமலே இன்பம் பெறுவதைச் சிறந்த வழி என்று கருதிவிட்டானா? அவன் வாய்மூடி இருப்பதால் தலைவி படும் துயரை அவனுக்கு யார் எடுத்து உரைப்பார்? தலைவியே கூறுதல் நலம் என்றுகூடத் தோழி கருதினாள். ஆனால், பண்பாடுடைய அவனுக்கு இதனை எடுத்துக் கூறுதல் பொருத்தமற்றது என்று கருதினாள் தலைவி.

ஒருநாளில் எப்பொழுதோ ஒரு நேரத்தில் வருகிறான் அவன். அந்த நேரத்தில் அவன் எதிர்பார்த்து வரும் இன்பத்திற்கு மறுதலையாக அவனுடைய கடமை பற்றி நினைவூட்டுவது நாகரிகமற்ற செயலாகும் என்று கருதினாள் தலைவி. தலைவிக்குத் தோன்றும் இவ்வெண்ணங்கள் தலைவனுக்குப் புலப்பட்டதாகவே தெரியவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்திருக்க