பக்கம்:அகமும் புறமும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 • அகமும் புறமும்

வனைப் போலத் தந்தையார் எனது நிலையை உணர்ந்து கொண்டார். தலைவனொடு நமக்குப் பிரிவு நேரிடும்; அந்த நேரத்தில் நம்முடைய தோள் நெகிழும். அவ்வாறு நெகிழ்ந்தால், இந்த வளையல்கள் கழன்று வீழ்ந்துவிடுமே என்று ஐயுற்றவர் போல, மிகவும் இறுக்கமாக அமைந்துள்ள சிறிய வளையல்களையே போட்டு விட்டிருக்கிறார்,” என்று கருத்துப்படக் கூறுகிறாள்.

திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்ஐ வாழிய பலவே! பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து
தோட்பழி மறைக்கும் உதவிப்
போக்குஇல் பொலம்தொடி செறிஇ யோனே!
                                                             (நற்றிணை, 136)

‘தலைவன் பிரிந்தபொழுது தோள் இளைத்தாலும் கழன்று விழாத வளையல்களாகப் பார்த்து எனக்குப் போட்டு அனுப்பினார் போலும் தந்தையார்! அவர் வாழ்க!’ என்று கூறுவதில் நகைச்சுவை அமைந்துள்ளது. ஆனால், நுண்ணிதின் நோக்குவார்க்கேயன்றி மேலாகக் கற்பார்க்கு விளங்கா வகையில் அமைந்து கிடக்கிறது அந்தச் சுவை. தன் தோள்கள் இளைத்துவிட்டமையைத் தலைவன் ஆர்வமிகுதியால் காணவில்லையாகலின், சிரிப்புடன் பேசுவதுபோல அவ்வுண்மையை அவன் காது கேட்கக் கூறிவிட்டாள். என்றாலும், அந்த நகைச்சுவையும் அவளுடைய பெண் தன்மைக் கேற்ப அடக்க ஒடுக்கத்துடன் வெளிவருகிறது. வெடிச் சிரிப்புடன் வரும் சொற்களல்ல இவை; மெல்ல முல்லையரும்புப் போன்ற பற்கள் மட்டும் வெளியே தெரியும் படியான புன் சிரிப்புடன் வரும் சொற்கள்.