பக்கம்:அகமும் புறமும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 111

அதைக் கொண்டு வந்து தந்து போவார்கள். தந்தைக்கும், அண்ணன்மார்க்கும் குடும்பத்தைத் தாங்க வேண்டிய பொறுப்பு இருத்தலின், அவர்கள் புனத்திற்கு எப்பொழுதாவது வந்தாலும் நீண்ட நேரம் தங்க இயலாது. தாயும் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கட்டுப்பாடு உடையவள். ஆதலால், அவளும் அடிக்கடி வரமாட்டாள். வந்தாலும், இவர்களுடன் தங்கமாட்டாள். எனவே, தலைவியின் பாடு கொண்டாட்டந்தான்!

இம்மாதிரி வாழ்க்கை நடைபெற்று வருகையிலேதான் ஒரு நாள் அவன் வந்தான்; தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்; உடன் காதலும் பிறந்தது. பின்பு இருவரும் தனியே சந்தித்தனர்; மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழித்தனர். தலைவனுடன் சேர்ந்த தலைவி, அந்த மலைப்புறமெல்லாம் சுற்றி அலைந்தாள்; அவனுடன் சேர்ந்தே மலைச் சுனைகளில் நீராடினாள்; அருவிகளிலும் குளித்து விளையாடினாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் வாழ்ந்து வரத் தலைப்பட்டனர். தலைவியின் உயிர்த் தோழிக்கு மட்டும் தலைவியின் இந்தப் புதிய வாழ்க்கை தெரியும். அவளும் தன்னால் இயன்ற அளவுக்குத் தலைவியின் வாழ்க்கை இன்பம் அடைய உதவுவாள். மற்றப் பணிப் பெண்களைப் பொருத்த மட்டில் தலைவியின் புது வாழ்வு நன்கு தெரியாது. தெரிந்தாலும், அவர்கள் அவள் செயல்களில் ஈடுபடுவதுமில்லை. அவள் நடத்தையைக் கவனிக்க அவர்கள் யார்? புனத்திற்கு வெளியிலிருந்து ஒருவரும் வாராத வரை தலைவியின் இன்ப வாழ்வு ஆற்றோட்டம் போல நன்கு நடைப்பெற்றுத்தான் வந்தது.

தாயோ, தந்தையோ வருகின்ற அந்த நேரத்தில் தலைவி பரண்மேல் நின்று கொண்டிருந்துவிடுதல் போதுமானது. என்றாவது தலைவியின் முகம் மாறுபட்டு இருப்பதாகத் தாய்க்குத் தோன்றும். அவளுடைய நடை,