பக்கம்:அகமும் புறமும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 • அகமும் புறமும்

தலைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். வீடு ஊரின் நடுவே இருக்கிறது. ஊருக்கோ, கட்டும் காவலும் மிகுதி. தலைவன் விருப்பம்போல வந்து தலைவியைக் கண்டு போக முடியவில்லை இப்பொழுது. எத்தனையோ முறைகள் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமற் போய் விட்டான். அவன் அடைந்த வருத்தம் கொஞ்சமன்று; ஆனாலும், அவன் ஆண் மகன் அல்லனோ! எனவே, தன் வருத்தத்தை அடக்கிப் பிறருக்கும் புலப்படா வண்ணம் மறைத்துக் கொண்டும், தன் பிற கடமைகளில் ஈடுபட்டும், கவலையை மறந்தும் வாழ்ந்து வருகிறான். ஆனால், தலைவியின் நிலைமை என்னாவது?

கட்டுக் காவல் மிகுந்த ஊரில், தன்னுடைய ஒவ்வொரு செயலையும் கூர்ந்து நோக்கும் தாயினுடைய பாதுகாவலில் இருந்து வருகிறாள் தலைவி. அவளுக்கு மட்டும் தலைவன் நினைவு இல்லையா? அவள் நேரம் முழுதும் அவனைப் பற்றிய நினைவிலேதான் கழிகிறது. ஆனால், அவள் படும் துயரை உயிர்த் தோழி தவிர வேறு யாரும் அறியவில்லை; அறியவும் முடியாது. அறிவதை அவள் விரும்பவும் இல்லை. ஆனால் பாரதியார் கூறியபடி, ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கிறது அவள் உள்ளம். மனத்தில் தோன்றிய இந்த வருத்தம் சும்மா விடுமா அவளை? அது மெள்ள மெள்ள அவளை அரிக்கத் தொடங்கி விட்டது. உடலில் மெலிவு கண்டு கைவளைகள் தாமாகக் கழன்று விழலாயின. உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை; ஏதொன்றிலும் மனம் நாடவில்லை. தலைவியின் இந்த நிலையைத் தாயும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். என்ன செய்வாள் பாவம்! அவளுக்குத் தெரிந்த கைம்முறை மருத்துவமெல்லாம் செய்து பார்த்து விட்டாள். பக்கத்து வீட்டுப் பாட்டிமார்கள் வந்து பார்த்தார்கள். ஒருமுகமாக அவர்கள் தீர்ப்பும் கூறி விட்டார்கள். தீர்ப்பு என்ன தெரியுமா? தலைவியைத்