பக்கம்:அகமும் புறமும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 5

ஏற்றுக்கொள்ளவும் இவனுக்கு மார்பிலும் முகத்திலும் வலுவேண்டாவா? குத்துச் சண்டை வீரன் உடல் முழுவதும் வன்மை பெறாமல் கையில் மட்டும் வன்மை பெற்றிருந்தால், அவன் ‘வீரன்’ என்ற பெயருக்கு இலக்காக முடியுமா? அவன் முழு வீரன் ஆதல் கூடுமா? வீரன் என்ற பெயருக்கு உரியவனாக வேண்டுமாயின், முழு உடலிலும் வன்மை பெற்றிருக்க வேண்டும்; எல்லா உறுப்புக்களிலும் வன்மை பெற்றிருக்க வேண்டும்.

வேண்டப்படுவன இரண்டு

அதே போன்று ‘மனிதன்’ என்ற பெயருக்கு ஏற்ப ஒருவன் வாழ வேண்டுமாயின், அவனுக்கு இன்றியமையாமல் வேண்டப்படுவன இரண்டு. முதலாவது உள்ளத்து உணர்வு; இரண்டாவது அறிவு, இரண்டும் வளம் பெற்றாலன்றி, அவன் முழுத்தன்மையுடையவன் எனக் கருதப்படான். ஒன்றைச் சுருக்கி மற்றொன்றை வளர்ப்பதால் விளைவது தீங்கேயாம். உலக சரித்திரத்தை ஒருமுறை நோக்கினால், இவ்வுண்மை நன்குவிளங்கும். எத்தனையோ சமுதாயங்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்தும் நிலைபேறில்லாமல் அழிந்தொழிந்தன. காரணம் யாது? உணர்வு, அறிவு என்ற இரண்டையும் ஒருங்கே வளர்த்திருந்தால் அவை நிலைபெற்றிருக்கக் கூடும். பலமான காற்றடித்தாலும், பிறர் தள்ளிவிட நேர்ந்தாலும் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்பவன் நன்கு நிற்றல் கூடும். அவ்வாறன்றி ஒரே காலில் நிற்பவன் உயிரைப் பிடித்துக் கொண்டு நிற்றல் கூடுமே தவிர, பிறர் தாக்கினால் விழாதிருத்தல் இயலாது. அதே போலச் சமுதாய வாழ்வுக்குத் தேவையான உணர்வு, அறிவு என்ற இரண்டு கால்களினாலும் நிற்கும் சமுதாயம் காலம் என்னும் பேய்க்காற்றாலும், பிற நாகரிகம் என்ற இடியாலும் தாக்கப்படினும் வீழ்வதில்லை. இதன் மறுதலையாக ஒரு காலில் நிற்கும் நிலை ஏற்பட்ட சமுதாயங்கள் நிலை பெறவில்லை. உணர்வையே