பக்கம்:அகமும் புறமும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 123

இடைக்காடர் முதலிய புலவர் பெருமக்களோடு ஒருங்கு வாழ்ந்தவர். ஆரிய அரசனாகிய பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்துவான் வேண்டிக் குறிஞ்சிப் பாட்டு என்றதொரு பாடலைப் பாடினார். அவ்வொரு பாடலின் மூலம் தமிழ்ச் சுவையை ஓரளவு அறிந்த அவ்வரசன், தமிழை நன்கு கற்றுத் தானும் தமிழ்க் கவி இயற்றும் அளவிற்குப் புலவனாயினான். கபிலருடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த பகுதி அவர் வள்ளல் பாரியினிடத்து நட்புக் கொண்டிருந்ததாகும். அவர், மூவேந்தரும் பாரியைக் கொன்ற பிறகு, பாரியின் மகளிர் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று, ஓர் அந்தணரிடத்து அவர்களை ஒப்படைத்தார்; பின்னர்ப் பாரியின் பிரிவுத் துயர் தாங்காமல் வடக்கு முகமாய் இருந்து, இந்திரியங்களை ஒடுக்கி, உணவு உட்கொள்ளாமல் உயிர் துறந்தருளினார்.

அவர் பாடினவற்றுள் மிகப் பெரும்பகுதி குறிஞ்சித் திணை பற்றியது. ஆகலின், ‘குறிஞ்சி பாடக் கபிலன்’ என்ற முதுமொழியும் பிற்காலத்தெழுந்தது. அவர் பாடியனவாக நற்றிணையில் 19ம், குறுந்தொகையில் 29ம், ஐங்குறு நூற்றில் 100ம், பதிற்றுப் பத்தில் 10ம், அகநானூற்றில் 16ம், ஆக 174 செய்யுட்கள் கிடைத்துள்ளன. இவற்றையல்லாமல் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டும் அவர் பாடியதே. அப்புலவர் பெருந்தகை பாடிய நற்றிணைப் பாடலுள் ஒன்றை இங்குக் காண்போம்.

மலை போன்ற பெரிய யானையின் பிடரியில் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி அமர்ந்திருக்கிறான். அவனைச் சூழக் கடல் போல் பெரும் படை செல்கிறது. பறை கொட்டும் புலையன் மிக்க எக்களிப்போடு கொட்டிச் செல்கிறான். மிக நீண்ட தூரம் சென்ற பிறகு பகைவனுடைய புலத்தில்

9