பக்கம்:அகமும் புறமும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 125

னுடைய ‘கண்கள்’ தலைவியின் நாணம் என்ற முதற் கோட்டையை அழிக்க வேண்டும். அதனை அழித்த பிறகு உள்ளே ‘நிறை’ என்று கூறப்படும் இரண்டாவது கோட்டை Second line of defence இருக்கிறது. தலைவன் தன்னுடன் பிறந்த ‘ஆண்மை’ என்ற படைகொண்டு தலைவியின் நாணம், நிறை என்ற கோட்டைகளைத் தகர்க்கிறான். நெடுநேரம் வரை வெற்றி தோல்வி யாருக்கு என்று கூற முடியாதபடி போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் இந்த முறையில் ஒருவரிடம் மட்டும் நடைபெறுவதன்று. தலைவனிடம் உள்ள ‘பண்பாடு’ என்ற கோட்டையைத் தலைவியின் கண்கள் தாக்குகின்றன. இவ்வாறு இருவரும் போரிட்ட நிலைமையில் இருவருக்கும் வெற்றி கிட்டி விடுகிறது. ‘காதற்போர்’ ஒன்றிலேதான் இரண்டு கட்சியாளர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

போரில் வெற்றி கிட்டியவுடன் அரசன் அமைதியை நிலைநாட்டும் வேலையை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு இளைப்பாறுகிறான். தலைவனுக்கும் இத்தகைய போர் ஒன்று கிட்டியத்ன்றோ? அப்போரில் தலைவியின் நாணம் முதலியவற்றை வெற்றி கண்ட பிறகு அவன் இளைப்பாறத் தொடங்கினான். தலைவியும் தன் போராட்டம் முடிந்து வெற்றி பெற்றவுடன் இளைப்பாறுகிறாள். போரில் மிக்க அனுபவம் உடைய தலைவன் கூறுவது போல அமைந்துள்ளது பாடல். இந்நிலையில் தலைவனுக்கு வியப்பு உண்டாகிறது. தன்னுடைய ஆண்மை முதலியவற்றை நினைந்து பார்க்கிறான். பகைவர்கள் தன் பெயரைக் கேட்டவுடன் நடுங்குவதை அவன் கண்டும் கேட்டும் இருக்கிறான். அத்தகைய வீரம் பொருந்திய, தானா இந்நிலைக்கு வர நேரிட்டது என்று வியப்படைகிறான். இவ்வாறு தன் தோல்விக்குக் காரணமாய் இருந்தவள்தான் யார்? போர் புரிதலில் வல்லவனாகிய தன்னைத் தோற்கச் செய்தவள் ஒரு பெண்தானே!