பக்கம்:அகமும் புறமும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 • அகமும் புறமும்

விதியின் விளையாட்டு என்றே இருவரும் கருதினர். ‘பால் வரை தெய்வம் கடைக்கூட்டக் கண்டனர்’ என்று பழந்தமிழர் இக்காட்சியை விரித்துரைத்தனர். எதிர்பாரா விதமாக ஒரு நாள் ஒரு சோலையில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டனர். ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.’ இருவரும் பார்த்துக் கொண்ட பார்வை மூலமாகவே ஒருவர் மற்றொருவருடைய உள்ளத்தில் புகுந்து நிலையாய்த் தங்கிவிட்டனர். ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.’ இக்காட்சியின் பின்னர் இருவரும் உள்ளமும் உடலும் கலந்தவர்களாய்ச் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிரிந்தனர். அவ்வாறு பிரியும் பொழுது அவள் மிகவும் வருந்தினாள்; இனி எப்பொழுது எவ்வாறு அவனைக் காண முடியும் என்று அஞ்சினாள். அவன் பலபடியாக அவளுக்கு அமைதி கூறினான்; தன் ஊர் மிக அணித்தாகவே உளதென்றும், தினந்தோறும் அவளை வந்து சந்திப்பதாகவும் கூறினான்.

தனது ஊர் மிகவும் அண்மையில்தான் இருக்கிறது என்பதை மிகவும் அழகுபடக் கூறுகிறான் அத்தலைவன்.

‘பெண்ணே, அஞ்ச வேண்டா! எம் ஊரிடத்துள்ள மலை போன்ற பெரிய மாளிகைகள் சுண்ணாம்பு பூசப் பெற்று மிக்க ஒளியுடன் விளங்குகின்றன. அந்தச் சுண்ணத்தின் வெண்மையான ஒளிபடுவதால், உன் ஊரில் உள்ள கரியநிறமுடைய குன்றுகள் அனைத்தும் வெண்மை நிறம் பெற்று. விளங்கும்’, என்ற கருத்தால்,


இருங்குன்ற வாணர் இளங்கொடி யே! இடர்
        எய்தல்! எம்ஊர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்துஒளி
        பாயநும் ஊர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும்
        கனங்குழையே!

(சிற்றம்பலக்கோவை–15)