பக்கம்:அகமும் புறமும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 • அகமும் புறமும்


திருச்சிற்றம்பலக் கோவையார் என்பது மாணிக்கவாசகர்என்று கூறப்பெறும் திருவாதவூர் அடிகளால் அருளிச் செய்யப் பெற்றது. திருவாசகத்தை அருளிய அப்பெருமானே இவ்வழகிய நூலையும் இயற்றியுள்ளார். கோவை என்பது ஒரு தலைவன் தலைவியைக் கண்டு காதலித்து அவளுடன் களவு மணத்தில் ஈடுபட்டுப் பின்னர் அவளையே மணந்து வாழ்வதைப் பற்றிப் பாடுவது, இந்த நிகழ்ச்சியை நானூறு பிரிவுகளாக வகுத்துக் கொண்டு பாடுவதே கோவை எனப்படும். தலைவன் தலைவியைக் காண்பது, “இவள் தெய்வ மகளோ!” என்று ஐயங்கொள்வது போன்ற ஒவ்வொரு நிலைக்கும் ஒன்று முதல் பல பாடல்கள் பாடப்பெறும். பெரும்பாலும் இறைவனையோ, ஒருபெரிய அரசனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டே பாடப்பெறும் இந்நூல். மணிவாசகப் பெருமான் பாடிய கோவையாரின் பாட்டுடைத் தலைவன் சிதம்பரத்தின்கண் ஆனந்தத் தாண்டவம் புரியும் பொன்னம்பலவனே. அந்தச் சிறந்த நூலில் மடல் ஏறுதல் பற்றி வரும் பகுதி மிக அழகானது. தலைவன், ‘நான் மடல் ஏறப்போகிறேன்,’ என்று கூறுகிறான். தோழி, ‘அது முடியாது,’ என்கிறாள். தலைவன், ‘ஏன் முடியாது?’ என்று கேட்கிறான். அதற்குத் தோழி அழகாக விடை கூறுகிறாள். ’தலைவீர், மடல் ஏற வேண்டுமானால், தலைவியினுடைய படத்தை எழுத வேண்டும் அன்றோ? எம் தலைவியின் படத்தைத்தான் எழுத முடியாதே! அவள் குரலுக்குப் பதிலாக ஒரு யாழை எழுதும்; அவள் பல் வரிசைக்குப் பதிலாக முத்துக்களை எழுதும்; கூந்தலுக்குப் பதிலாக மேகக் கூட்டத்தைப் பூவுடன் எழுதும்; அவள் உதடுகட்குப் பதிலாக ஒரு கொவ்வைக் கனியை எழுதும்; இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூங்கொம்பு இருக்குமாயின்,