பக்கம்:அகமும் புறமும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 • அகமும் புறமும்

குறை முடித்துத் தருதலும் அவன் செய்ய வேண்டுமாயின், அவனது காலம் முதலாவது வீணாகும்; இரண்டாவது அவனுடைய பொருள் வீணாகும்; மூன்றாவதாகவும் மிக முக்கியமானதாகவும் அவன் மனைவியைப் பிரியவும் நேரிடும். எந்த ஒருத்தியைப் பிரியாமல் இருக்க ஒரே வழி குடும்பம் என்று நினைத்தானோ, அந்தக்குடும்பமே இன்று அவன் அவளை விட்டு நீங்கக் காரணமாய் விட்டது.

இந்தச் சூழ்நிலையில் ஒரு தலைவன் அகப்பட்டுக் கொள்கிறான். குடும்பம் வைத்தமையின் அப்பொறுப்புகளைச் சரிவர நடத்தப் பொருள் தேடச் செல்ல வேண்டியுளது. ஆனால், தலைவியின்மாட்டுக் கொண்ட அன்பு அவன் கடமையை உதறிவிடத் தூண்டுகிறது. கடமைக்கும் அன்புக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் தொடங்கி விடுகிறது. ‘கடமையே பெரிதாதலின், ‘ஆண் மகனாகிய நீ அதற்கு இடையூறாக நிற்றல் கூடாது,’ என ‘அறிவு’ அவனை இடித்துக் கூறுகிறது. ஆனால் அன்பால் நிறைந்த நெஞ்சம், ‘கடமையாவது கத்தரிக்காயாவது! இரு!’ என்று கூறுகிறது.

அறிவும் அன்பும் பெரும் போராட்டம் நிகழ்த்துகின்றன. ஆனால், இப் போராட்டம் நடைபெறுகையில் தலைவன் ஊரில் தலைவியுடன் வாழவில்லை. பொருள் தேடுதல் நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளான். ஆனால், போன காரியம் இன்னும் முற்றிலும் முடியவில்லை.

நெஞ்சு பேசுகிறது; ‘தலைவியை விட்டுப் பிரிந்து எத்தனை நாட்களாகின்றன! உண்மையான அன்பென்பது இதுதானா! அவளை நினைத்தாலும் அவள் உருவம் மனக்கண்முன் வந்து நிற்கிறதே!’

அறிவு:-என்ன நெஞ்சே! இடங்கொடுத்தவுடன் ஒரே அடியாக உன் கதையைத் தொடங்கிவிட்டாயே! கடமை என்ற சொல்லை நீ எங்காவது கேள்விப்பட்டதுண்டா?