பக்கம்:அகமும் புறமும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 • அகமும் புறமும்

என்று உதவி வேண்டி நிற்பவர்கள் கடைத்தலையில் நின்று கொண்டு இருக்கையில் தலைவி மட்டும் அதுபற்றிக் கவலைப்படாமல் உண்டு உடுத்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நினைத்துப் பார்.

நெஞ்சு:–ஆம்! அவள் இம்மாதிரிச் சந்தருப்பங்களில் மகிழ்ச்சியாக இருக்க முடியாதுதான். அதற்காக அவள் தலைவனை விட்டுப் பிரிந்து தனியே வாடும்படி விட்டு விட்டால் மட்டும் மகிழ்ச்சி ஏற்பட்டு விடுமா!

அறிவு:–பைத்தியக்கார நெஞ்சே! எப்பொழுதுமே துயரத்தில் ஆழ்ந்து இருக்கும்படியாகவா விட்டுவிடுகிறோம்? பொருள் தேட இங்கு வந்த நம் தலைவன் மட்டும் தலைவியை விட்டு இங்கேயே இருந்துவிடப் போகிறானா, என்ன! வந்த கடமை முடிந்து, வேண்டிய பொருள் கிடைத்தவுடன் ஊருக்குத்தானே புறப்படப் போகிறான்?

நெஞ்சு:–அறிவே, நீயும் உன் தலைவனும் கடமையை முடித்துக் கொண்டு புறப்படும்வரை அருமைத் தலைவி உயிருடன் இருப்பாள் என்பது என்ன உறுதி? ஆ! அவளுடைய கரிய கூந்தல் முதுகில் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருப்பதை நினைப்பதும் ஓர் இன்பமாகிறது. அவளுடைய அகன்ற அந்த விழிகள், ஆளை விழுங்கி விடுவது போன்று பார்க்கும் அந்தப் பார்வை, இவை இரண்டுடன் அவள் என்னைப் பிணைத்து விட்டாளே! என் செய்வது?

அறிவு:–நெஞ்சே, ஏது! இவ்வளவு தூரத்திற்கு வந்தும் வந்த காரியத்தை மறந்துவிட்டுத் தலைவியைப் பற்றிய உன் எண்ணங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் எனக்குக்கூட அறிவு மழுங்கிவிடும் போல இருக்கிறதே! சிறிது நினைத்துப் பார்; நாம் இவ்வளவு தூரம் வந்து வந்த காரியத்தை முடிக்காமல் ஊர் திரும்பினால் நம்