பக்கம்:அகமும் புறமும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 • அகமும் புறமும்

இருந்தவள் ஒரே மகள் அல்லவோ? அந்த ஒருத்தியும் இன்று இல்லாமல் சென்றுவிட்டாளே;

அத்தாயும் அறியாதவள் அல்லள். ஒருவாறு தன் துயரத்தை மறந்துவிட்டு இருக்கவே முயல்கிறாள். ஆனாலும், என்ன கொடுமை! வீட்டைச் சுற்றி நொச்சிச் செடி வளர்ந்துள்ளது; நீலமணி போலப் பூக்களைப் பூத்துக் குலுங்கி நிற்கிறது. அதைப் பார்க்குத் தோறும் மகள் நினைவு வருகிறது, அச்செடியின் அடியில் அருமை மகள் விளையாடி வளர்ந்ததை அவள் எவ்வாறு மறக்க இயலும்! அவள் அமர்ந்து விளையாடிய திண்ணையை நினைக்க நினைக்கத் தாய்க்குப் பெற்ற மனம் வெடித்துவிடும் போல ஆகிவிடுகிறது.

இது ஒரு மனத்தத்துவம். அண்மையில் அன்புடையவர்களை இழந்து விட்டவர்கட்கே இது தெரியும். இறந்தவர்களுடைய பொருளைக் காணும் போதெல்லாம் துயரம் புதியவேகத்துடன் வெளிவரும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இதனை அழகாக மகனை இழந்த தாய் என்ற பாடலில் பாடுகிறார். இறந்த மகனைப் புத்தர் பிரான் எதிரே போட்டு அத்தாய் அழுவது இம்மன நிலையை நன்கு விளக்குகின்றது. அக்குழந்தை விளையாடிய பொருள்களைக் காணும் பொழுதெல்லாம் தன்துயரம் புதிய உருவெடுத்தலை இதோ அத்தாய் கூறுகிறாள்;

‘சித்திரத் தேரும் சிறுபறையும் கூடிஎனைப்
பித்தியிலும் பித்தி பெரும்பித்தி ஆக்குதையா!’

(கவிமணி)

இதே போன்ற கருத்தைத்தான் நற்றிணைப் பாட்டில் வரும் அத்தாயும் கூறுகிறாள்.

“அறிவுள்ள அயல் வீட்டவர்களே! உங்களைப் போல நான் பல புதல்வியரைப் பெறவில்லை. ஒரே பெண்ணைப்