பக்கம்:அகமும் புறமும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 • அகமும் புறமும்

அதை இவளுக்கு நினைவூட்டினால் ஒரு வேளை அச்செல்வ வாழ்வை மீட்டும் விரும்புவாளோ என்று ஐயுற்றார்; எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; தம் இடத்தில் பொருளுதவி பெறுதல் தவறன்று என்று பல வகையாகவும் எடுத்துக்காட்டினார். ஆனால், இவள் அவருடைய சொல்லை மறுத்துவிட்டாள்; எந்த விதமான உதவியும் பெற மறுத்துவிட்டாள். எத்துணைத் துன்பமுற்றாலும் தன் தந்தையாரிடமிருந்து உதவி பெற இவள் விரும்பவில்லை; தன் கணவனுடைய பெருமைக்கு அவ்வாறு உதவி பெறுதல் இழுக்கு என்னும் முடிவுக்கு வந்தாள். கணவனும் உதவி பெறுதலை விரும்ப மாட்டான் என்பது இவளுக்கு நன்கு தெரியும்!

மாமனாருடைய செல்வத்தில் பங்குபெற்று வாழ்தல் மிகவும் மானக்கேடானது என்பது அவனுடைய கொள்கை. அன்றைய நாளில் தமிழன் இவ்வாறுதான் கருதினான். எத்துணை வறுமையில் ஆழ்ந்துவிட்டாலும், தானாகச் சம்பாதியாமல் பிறர் பொருளை வைத்து வாழ்வது மானக்கேடானது என்பது தமிழனுடைய உறுதியான கொள்கை. இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு இப்பெண் தன் தந்தையார் தருவதாகக் கூறிய செல்வத்தை ஏற்க மறுத்துவிட்டாள்.

இப்பெண்ணின் இல்வாழ்க்கையை ஒருநாள் வளர்த்து வந்த செவிலித்தாய் சென்று கண்டாள். மகளின் இக் கால வாழ்க்கை அவளுடைய கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. இவளுடைய பழைய வாழ்க்கையையும் பால் சோறு உண்ண மறுத்த குறும்புத்தனத்தையும் மீட்டும் நினைந்து பார்த்தாள். கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஆனால், மகள் வறுமையில் செம்மையாக வாழ்க்கை நடத்துவதைப் பார்த்ததும், பெருமித உணர்ச்சி மேலிட்டு விடுகிறது. மீண்டும் தன் வீட்டிற்கு வந்தாள் செவிலித்தாய், இவற்றை யெல்லாம் நினைத்து ஒரு கவிதையாகப்