பக்கம்:அகமும் புறமும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 • அகமும் புறமும்

முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.

பழந்தமிழனுடைய பண்பாட்டைப் பார்க்க இது ஒரு தக்க வாய்ப்பாகும். சாதாரண நேரங்களில் மிக்க பண்பாட்டுடன் நடந்துகொள்பவர்கள்கூட, மனத்தில் ஒரு கவலை புகுந்துகொண்டால், பண்பாட்டை இழந்துவிடுவர். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி நடந்து கொள்வர். இங்குத் தலைவனுடைய நினைவெல்லாம் தலைவியிடம் சென்றுவிட்டது. அவன் தேரை விரைவாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளை இடுகிறான். ஆனால், அந்நிலையிலும் அத்தலைவன் உடன்வருபவர்களை மறந்து விடவில்லை. அவர்கள் வேண்டுமானால் சிறிது நேரம் தங்கி இளைப்பாறிவிட்டு வரலாம் என்று கட்டளை இடுவானே யாகில், அவனுடைய பரந்த பண்பாட்டை அறிய வேறு சான்றும் வேண்டுமா?

தங்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் பிறருக்கு எத்துணைத் துயரம் அதனால் ஏற்படும் என்பதைப் பற்றிக் கவலைப்படாத பெரிய மனிதர்களை நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம். ‘இதற்கெல்லாம் நாம் கவலைப்பட முடியுமா சார்!, என்று இப்பெரிய மனிதர்கள் வாய் கூசாமல் பேசுவதையும் கேட்கலாம். ஆனால், தான் விரைவாகச் செல்லவேண்டிய வேளையில் தலைவன் கட்டளையைக் காணுங்கள்! ‘தீண்டா வைமுள் தீண்டி.... ஏமதி’ என்று கட்டளை இடுகிறான். தாற்றுக் கம்புக்கு அடைமொழி ‘தீண்டா’ என்பதாகும். குதிரை ஓட்டுபவர்கள் ‘சவுக்கு’ வைத்திருப்பது முறைதான். ஆனால், அதனை ஓயாமல் பயன்படுத்தும் சில மக்களையும் காண்கிறோம். ‘அக்கம்பு கையில் இருப்பதே குதிரையை அடிக்கத் தானே?’ என்று பேசுவார்கள் இவர்கள். ஆனால், பயன்படுத்தாமல் குதிரைக்கு அச்சத்தை