பக்கம்:அகமும் புறமும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 169

உண்டாக்க மட்டுமே வைத்துள்ளான் அக்கம்பை அப்பழந்தமிழன். அதைப் பயன்படுத்து என்று கூறும்பொழுது கூடத் ‘தீண்டி’ (மெள்ளத் தொட்டு) என்ற சொல்லாலே தான் கூறுகிறான்.

தன்னோடு பல்காலும் பழகுகின்ற குதிரையினிடத்து அவன் கருணை காட்டுகிறான் என்பது மிகுதியும் பாராட்டற்குரிய ஒன்று அன்று. அஃறிணையாகிய குதிரையினிடத்தும் அவன் கருணையுடையவன் என்பதற்காகவே அவனைப் பாராட்டுகிறோம். ஆளால், அதிகம் பழகியதாலும், அதனால் தான் பயன் பெறுவதாலும் ஒருவேளை அவன் அதனிடத்து அன்பு பாராட்டுகிறானோ என்று நினைக்கத் தேவை இல்லை. அவன் இயல்பாகவே இப்பண்பாடுடையவன் என்பதையும் நாம் அறியப் பாடல்கள் உள்ளன.

ஒருதலைவன், வினை முற்றி மீண்டு வருகிறான். வருகின்ற காலமோ, கார்காலம். வரும் வழியோ, அடர்ந்த காட்டு வழி. கார் காலம் ஆகலின், காடு முழுவதும் பூத்துக் குலுங்குகின்றது. அப்பூக்களினிடத்து வண்டுகள் மொய்க்கின்றன. எவ்வாறு அவை வருகின்றன? இரட்டையாக, துணையோடு புணர்ந்தவையாய் வருகின்றன. அவ்வாறு வண்டுகள் நிறைந்துள்ள வழியில் தலைவன் தேரில் வருகிறான். தேரில் மணிகள் நிறையக் கட்டியுள்ளன. தேர் வேகமாக வரும்போது மணிகள் ஒலிக்குமல்லவா? காட்டில் திடீரென்று இவ்வாறு மணி ஒலி கேட்குமானால், துணையுடன் மகிழ்ந்து தேன் உண்ணும் வண்டுகள் அச்சத்தால் ஓட நேரிடுமே! துணையுடன் மகிழ்ந்திருக்கும் அவை பிரிந்து செல்லத் தான் காரணமாய் இருக்க விரும்பவில்லை அத்தமிழ் மகன். அதற்காக யாது செய்கின்றான்? தன் தேரில் உள்ள மணிகளின் நாவைப் பிடித்துக் கட்டிவிட்டான். தன்னோடு