பக்கம்:அகமும் புறமும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 175

இவளுடைய விளக்கத்தை மற்றொன்று முன்னின்று மறைத்து விட்டது. அதுவே இவள் அவன்மேற் கொண்ட பெருநம்பிக்கை. அவன் கூறினான்; இவள் அதனை ஏற்றுக் கொண்டாள். இதனை யார் மறுக்கமுடியும்? பிறர் கூறிய சொற்களானால், இவளும் அவற்றை ஆய்ந்து பார்த்துப் பொய்ம்மை மெய்ம்மை ஆராய்ச்சியில் ஈடுபடுவாள். ஆனால், இப்பொழுது பேசியவன் யார்? இவளுடைய தலைவன் அல்லனோ! அவனா இவளை ஏமாற்றுவான்? அவனும் இவளும் வேறு அல்லரே! அப்படி இருக்க, அவன் சொற்களில் இவள் ஐயங்கொள்ளக் காரணம் இல்லை யன்றோ? அவனுடைய சொற்களில் பொய் தோன்றுமா! இதென்ன வேடிக்கை! சந்திரனில் நெருப்புப் பிறக்குமா? என்றாவது திங்களில் தீத் தோன்றினால், அன்றுதான் அவனுடைய சொற்களில் பொய் தோன்றும்.

“குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின்
திங்களுள் தீத்தோன்றி அற்று.”

(குறிஞ்சிக்கலி–5)

இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் தலைவி தலைவனுடைய சொற்களில். எனவே, இவள் நம்பிக்கை, இவள் அதிகம் வருந்தாமல் இருக்க துணை செய்கின்றதன்றோ?

நாட்கள் ஓடிமறைகின்றன. வீட்டில் உள்ள சுவர்களில் (அழகான ‘காலண்டர்கள்’ இல்லாத காலம்) தலைவன் சென்ற பிறகு வந்து போன நாட்களைக் கோடிட்டு வைத்தாள் தலைவி; சில நாட்களில் நின்று அக்கோடுகளைப் பார்த்துப் பெருமூச்செறிவாள். சென்னைப் பட்டினம் போன்ற நகரங்களில்–அல்ல நகரங்களில்–பஸ்ஸை எதிர்பார்த்து நிற்பவர்கள் ‘கியூ’ வரிசை நீள்வது போலத் தலைவி கிழித்த கோடுகள் நீண்டன. ஆனாலும், தலைவன் வந்த பாடில்லை. தலைவிக்கு வருத்தம் மிகுந்ததே தவிர, நம்பிக்கை தளரவில்லை. இக்காலம்