பக்கம்:அகமும் புறமும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 185

பரதவர்கள் கூடி மீன் பிடிக்கக் கட்டு மரங்களுடன் கடலினிற் சென்றுவிட்டால் மாலையிலேதான் மீள்வார்கள். ஆதலின் பகற்பொழுது முழுவதும் தலைவன் தலைவியைச் சந்திக்க நல்ல வாய்ப்பாய் இருந்தது. தாழம் புதர் நிறைந்துள்ள சோலைகள் மிக்கு இருத்தலின், பிறர் கண்ணில் படாமல் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்தன போலும்! பல நாட்களாகவே இந்நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைவி கடற்கரையில் பார்க்க வேண்டிய அலுவல் முடிந்து விட்டது. அவளைப் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். முன்போலத் தலைவனை அடிக்கடி சந்திக்க முடியவில்லை எனினும், தலைவன் விடுவதாக இல்லை. அவன் மெல்லத் தோழியின் உதவியை நாடினான். தோழி, அவனுடைய வருத்தத்தையும் தலைவியின் துன்பத்தையும் கண்டு ஒருவாறு மனம் இரங்கினாள்; பகல் நேரத்தில் அவன் வந்து போக ஏற்பாடு செய்தாள்; அவன் வந்து தங்களைச் சந்திப்பதற்குரிய ஓர் இடத்தைக் குறிப்பிட்டாள். இதனைப் ‘பகற்குறி’ என்று இலக்கணநூல் பேசும். அந்த நேரத்தில் தோழி தலைவியும் தானும் வெளியிற்செல்வது போல வீட்டாருக்குப் போக்குக் காட்டிவிட்டுப் புறப்படுவாள்; தான் முன்னரே தலைவனிடம் குறிப்பிட்டுள்ள இடத்திற்குத் தலைவியை அழைத்துக் கொண்டு செல்வாள்.

இம்முறையில் ஒரு நாள் தலைவன் வந்தான். ஒரு புன்னை மரம் நன்கு தழைத்து வளர்ந்திருந்தது. பூரிப்பும் இளமையும் செழித்துக் கொழிக்கும் தன் காதலியைச் சந்திக்க இம்மரநிழல் மிகவும் பொருத்தமுடையது என நினைத்துவிட்டான் அவன். பாவம்! அவனுக்கு இம்மரத்தின் வரலாறு எவ்வாறு தெரிய முடியும்? ஆனால், தோழியும் தலைவியும் இம்மரத்தின் அருகே வரக்கூட நாணினர். ஏன்? வரவே மறுத்துவிட்டனர். தலைவனுக்கு ஒரே வியப்பு உண்டாயிற்று.