பக்கம்:அகமும் புறமும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 • அகமும் புறமும்

திருமண ஏற்பாடு ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டமையின், அத்தோழி ஒருநாள் மாலைப் பொழுதில் தலைவனைக் கண்டு நேரே அவனிடம் பேசத் தொடங்கி விட்டாள்.

பகல் நேரத்தில் தலைவியைச் சந்திக்க வந்தான் தலைவன். அவன் புறப்படுவதற்குள் மாலை முற்றி இருள் கவிய ஆரம்பித்து விட்டது.

“மிகவும் உயர்ந்த ஆகாயத்தில் திரிகின்ற செழுமையான கதிர்களை உடைய சூரியன் பெரிய மலைப் பக்கத்தில் மறைந்து விட்டான். ஆதலால், கடற்கரையில் யாரும் போக்குவரத்து இல்லை. இறால் மீன்களைத் தின்று விட்டு எழுந்த கரிய கால்களையும் வெண்மை நிறத்தையும் உடைய நாரைகள், உப்புக் குவட்டின் மேலே பறந்து சென்று, கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் கிளைகளில் தம் துணையுடன் தங்கிவிட்டன. தண்டுடன் கூடிய நெய்தல் மலர், மறையும்படியாக நீர் பெருகுகிற கழியில் துணையுடன் கூடிய சுறா மீன்கள் வழங்குகின்றன. இரவிலும் ஒலிக்கின்ற கடலில் பல விளக்குகளை எடுத்துக் கொண்டு எம் சுற்றத்தார் மீன் பிடிக்கச் சென்றுவிட்டார்கள். ஆதலால், அலைகளின் பிசிர் வீசும் கடல் மத்தளம் போல ஒலிக்கிற எம்முடைய ஊரில் இன்றிரவு தங்கி விட்டுப் போனால் யாது குறை ஐயா?”


சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே;
இறவுஅருந்தி எழுந்த கருங்தால் வெண்குருகு
வெண்குவட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரைய
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே;
கணைக்கால் மாமலர் கரப்ப மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை
எல்இமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஈ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்