பக்கம்:அகமும் புறமும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 • அகமும் புறமும்

விட்டால் இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தில் இருக்க வேண்டுவதில்லை அல்லவா?” என்று கூறினாராம்.

பரத்தையரின் மனோநிலையை விளக்க இந்த ஒரு உதாரணத்துடன் நற்றிணைப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்:

தலைவன் பரத்தை வீட்டில் வந்து பல நாட்களாய்த் தங்கிவிட்டான். இவன் வீட்டைவிட்டு வருகிற காலத்தே தலைவி சூல் முதிர்ந்திருந்தாள். எனவே, பரத்தையின் இல்லம்புக்க தலைமகன், வீடு செல்லவேண்டும் என்னும் நினைவின்றி அங்கேயே தங்கிவிட்டான். இந்நிலையில் ஒரு நாள் அவனுக்கு மகன் பிறந்த செய்தியைச் சிலர் வந்து கூறினர். எவ்வளவுதான் தலைவியை மறந்தவன் போல அங்குத் தங்கிவிட்டாலும், மகன் பிறந்து விட்டான் என்று கேள்விப்பட்டவுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வராமலா இருந்துவிடும்? எனவே, தன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டான். ஆனால், அம் முடிவைக் கொண்டுசெலுத்துவதில், இரண்டு பெரிய அல்லல்கள் உள்ளன. முதலாவது, இத்தனை நாட்கள் தங்கிய பரத்தை வீட்டைவிட்டு எவ்வாறு திடீரென்று புறப்படுவது என்பதாகும். இரண்டாவது, இத்தனை நாட்கள் எட்டிப் பாராத தன் வீட்டுக்குள் இப்பொழுது எப்படித் திடீரென்று நுழைவது என்பதாகும். இவ்விரண்டு தொல்லைகளையும் ஒரே வகையில் தீர்க்க முனைகிறான் தலைவன். இரவு நடுயாமத்திற்குமேல் புறப்பட்டால் இரண்டு வீட்டில் உள்ளவர்கள் நன்கு உறங்கிக் கொண்டிருப்பார்கள். எனவே, அந்த நேரத்தில் புறப்பட்டுத் தன் வீட்டுக்குள் புகுந்துவிடலாம் என அவன் முடிவு செய்து விட்டான். ஆனால், பரத்தையை இவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியுமா? எனவே, அவள் அவன் செய்தவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். தலைவனுடைய சுற்றத்தார் அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி