பக்கம்:அகமும் புறமும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 • அகமும் புறமும்

இடையீடுபடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கலாமே என இவனுடைய ஆசையைத் தூண்டிவிட்டுப் பார்த்தாள். இவ்வளவு தூரம் அவள் கூறியும் இவள் அதற்காக எல்லாம் அசைந்து கொடுத்தால்தானே! ஒன்றுமே நிகழாததுபோல இவன் தினம் பகலிலும், இரவிலுமாக வந்து போகிறான். இவனுக்கு மட்டும் தோழி கூறும் காரணங்கள் தெரியாதவைகளா? தெரிந்திருந்தும் பின்னர் ஏன் களவை நீட்டித்துக் கொண்டிருக்கிறான்? இத்தனை தொல்லைகளையும் மீறி இவன் களவை நீட்டிக்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்கவேண்டும்.

பிறர் அறியாமல் செய்கிற ஒவ்வொரு செயலிலும் மனிதன் இன்பத்தை அடைகிறான் போலும்! ஆகையால், களவு வாழ்க்கையில் அதிக இன்பம் பெறுவதாக எண்ணி, தலைவன் களவை நீட்டித்தான் போலும்! இதே தலைவன் தான் இப்பொழுது குடும்பம் நடத்துகிறான், அதே தலைவியுடன். ஆனால், திடீரென்று ஒரு நாள் இவனுக்குப் பழைய ஞாபகம் எங்கிருந்தோ வந்துவிட்டது போலும்! பிறர் அறிந்தால் எள்ளி நகையாடுவர் என்று அறிந்திருந்தும், இவன் பரத்தை வீட்டிற்குப் போய்வர முடிவு செய்துவிட்டான் இவன்மேல் அதிகத் தவறு கூறவும் காரணம் இல்லை. இவன் ஒரு கலைஞன். இவனுடைய கலை மனம் பிறருடைய அங்க நெளிவுகளிற்கூட ஓர் அழகைக் காண்கிறது. பாடலைக்கொண்டு இவன் எவ்வளவு கலையுள்ளம் படைத்தவன் என்பதை அறிதல் கூடும். எனவே, எங்கோ ஒருநாள் ஒரு பரத்தையின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். முதலில் அவளுடைய கலையிலேதான் இவன் ஈடுபட்டான்; கலையுள்ளம் எத்துணைச் சிறந்ததாக இருப்பினும், அதனால் சில தீமைகளும் விளைதல் கண்கூடு.

கலை உள்ளம் என்றாலே அது எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியது என்பதை அறிந்து கொள்ளலாம்.