பக்கம்:அகமும் புறமும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 203

உணர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு மிகுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கலையில் ஈடுபட முடியும். எனவே, கலையும் உணர்ச்சியும் கைகோத்துச் செல்லும் இயல்புடையன என்பதையும் அறியலாம். உணர்ச்சி மிகுந்து விட்டபொழுது மனிதன் அறிவையும் நடுவு நிலையையும் இழக்க நேரிடுகிறது. அறிவை இழக்கும் பொழுது செய்யத் தகுவன இவை, தகாதன இவை என்று பாகுபாடு மறைந்துவிடுகிறது. உதாரணமாக, கோபம் என்ற உணர்ச்சியை எடுத்துக்கொள்வோம். எத்துணைச் சிறந்த பெரியவர்களும் கோபம் உற்ற பொழுது தவற்றைச் செய்து விடுகின்றார்கள். கோபம் தணிந்த பிறகு தாமே தம் செயலைக் கண்டு வெட்கித் தலை குனிகின்றனர். என்றாலும், மறுமுறை கோபம் வாராமல் இருப்பதில்லை. எனவே, கோபம் முதலிய உணர்ச்சிகள் மிகும்பொழுது அறிவும், நடுவு நிலையும், ஆராய்ச்சியும், நன்மை தீமை முதலிய பாகுபாடும் விடைபெற்றுக்கொள்ளும் என்பது தெளிவு. இக் காரணத்தாலேதான் சிறந்த கலைஞர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் தவறி விடுகிறார்கள்.

இறைவனிடம் செலுத்தப்படும் பத்தி உணர்ச்சி ஒன்று நீங்கலாக, ஏனைய உணர்ச்சிகள் அனைத்தும் இத்தீமையை ஓரளவு செய்யாமல் இருப்பதில்லை. பரத்தையின் ஆடல் பாடலைக் கண்டுகேட்டு மயங்கிய தலைவன், அவ்வாடல் பாடல்களிலேதான் முதலில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றிய இந்த ஈடுபாடு மெள்ள அவன்அறிவை மயக்கிவிட்டது. நாட்கள் செல்லச் செல்ல, அக் கலையில் இருந்த ஈடுபாடு அக் கலைப் பொருளில் செல்லத் தொடங்கிவிட்டது. பரத்தையின் ஆடலில் கொண்ட ஈடுபாடு மெள்ள அவளிடமே செல்லத் தொடங்கிவிட்டது. துணிந்து ஒருநாள் அவள் வீட்டிற்குச் சென்று விட்டான்.

14