பக்கம்:அகமும் புறமும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 207

இடும் இருவருமே சேர்ந்து இடை நிற்பவரை அடித்து விடுதலும் உண்டு. எனவே, போரிடுபவர்களிடையே அமைதியை நிலை நாட்டப் போவது அவ்வளவு இனிய செயல் அன்று. ஆனால், எல்லா இடங்களிலும் இந்நிலை ஏற்படும் என்று கூறுவதற்கில்லை. பல சமயங்களில் பூசல் இடுகிறவர்களைப் பொறுத்தே இடை நிற்பவர் நிலையை முடிவு செய்ய முடியும். பூசலிடுபவர் பண்பும் நாகரிகமும் உடையவர்களாக இருப்பின், இடை நிற்பார் நிலை அவ்வளவு தீமையுடையதாகி விடாது. எவ்வளவு மாறுபாடும் சினமும் இருந்தாலும் எல்லை கடந்து போகாமல் காக்கின்றவர்களும் உண்டு அல்லவா? கணவன் மனைவியர் போராட்டம் பெரும்பாலும் இந்த வகையையே சேரும். பண்புடைய தலைவனும் தலைவியும் கூடி வாழ்க்கை நடத்தும் பொழுதும் சில சந்தருப்பங்களில் கருத்து வேறுபாடு தோன்றிவிடுகிறது. அப்பொழுதும் பூசல் ஏற்படும். ஆனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை காரணமாக உடனே அம் மாறுபாடு நீங்கிவிடுவர். இத்தகைய போராட்டங்களில் பெரும்பான்மை மனைவியும் சிறுபான்மை கணவனும் விட்டுக்கொடுத்தல் இயற்கை. பெரும்பாலும் போராட்டத்தின் காரணத்தை ஒட்டித்தான் இம்முடிவும் ஏற்படும்.

சில சந்தருப்பங்களில், போராட்டத்தின் காரணத்தை ஒட்டி இப்பூசல் நீண்ட நாட்கள் நடைபெறுவதும் உண்டு. கணவன் ஒழுக்கக்கேடு செய்கிறான் என்பதை எந்த மனைவியும் எளிதில் மன்னிக்க மாட்டாள். இன்றும் தென்தமிழ் நாட்டில் ‘வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிடமாட்டாள்,’ என்று வழங்கும் பழமொழி இக்கருத்தை வலியுறுத்தி நிற்கின்றது. கணவன் செய்த தவறு எதுவாயினும், அதனை முழு மனத்துடன் மன்னிக்காத மனைவியே இல்லை என்று கூடக் கூறிவிடலாம். ஓயாமல் மனைவியை அடிக்கும் கணவன்மார்-ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் ‘பீப்பாயில்’