பக்கம்:அகமும் புறமும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 • அகமும் புறமும்

மிதக்கும் ‘பெருங்குடி’ மக்களான கணவன்மார்-திருமங்கலியத்தையும் திருடிச்சென்று அஸ்வமேத யாகத்திற்குப் (குதிரைப் பந்தயம்) பலியிடும் கணவன்மார் என்னும் இத்தகைய கணவன்மார் அனைவரையும் மன்னித்து விடுகின்ற மனைவிமார் உண்டு. இன்னும் சில குடும்பங்களில் மேலே கூறிய அனைத்துப் பண்பாடுகளையும் ஒருங்கே பெற்ற கணவன்மாரும் உண்டு. இவ்வளவு தீய பண்புகள் நிறைந்திருந்தும், அக் குடும்பங்களில் நாம் சற்றும் எதிர்பாராத ஒற்றுமை நிலவுவதுண்டு; அம் மனைவிமார் தம் கணவர்களை நல்லவர்கள் என்றும், சேர்க்கை காரணமாகவே கெட்டு விடுகிறார்கள் என்றும் கூறுவதைக் கேட்டு வியவாமல் இருக்க முடியாது. இவ்வளவு குற்றங்களையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிடும் ஒரு மனைவிகூட மன்னிக்க முடியாததும் விரும்பாததுமான ஒரு குற்றம் உண்டு. அந்தக் குற்றத்தை ஒரு கணவன் செய்து விட்டால், வேறு துறைகளில் அவன் எவ்வளவு சிறந்தவனாயினும், அவன் மனைவி அதனைத் தாள மாட்டாள். இதன் அடிப்படை மனத்தத்துவம் யாதாக இருக்கலாம் என்று அறிதற்கில்லை. தன்னை ஒத்த வேறு ஒரு பெண்ணைத் தன்னுடைய கணவன் நாடினான் என்று நினைக்கும் பொழுது அம் மனைவியினுடைய ‘அகங்காரம்’ தாக்கப்படுகிறது. தன்னிடத்து இல்லாத எந்த அழகைத் தன் கணவன் அப்பிற பெண்ணிடத்துக் கண்டான் என்ற எண்ணம் முதலில் தோன்றும்போலும்! தன்பால் இல்லாத ஒன்றை அவள் பெற்றிருந்த காரணத்தாலேயே தலைவன் அவளை விரும்பினான் என்ற நினைவு தோன்றியவுடன் பொறாமைதான் முதலில் தோன்றுகிறது. தன்பால் அந்த ஒன்று இல்லையே என்ற நினைவு தோன்றுந்தோறும் அவளுடைய அகங்காரம் ஆயிரம் புண்ணைப்பெறுகிறது. எனவே, கணவன் தனக்கிழைத்த தீங்கை மிகப் பெரிதாக நினைக்கிறது மனைவியின் மனம். ஏனைய குற்றங்களை அவன் புரிகையில்