பக்கம்:அகமும் புறமும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 209

தலைவிக்கு நேரடியாக அதிக நஷ்டம் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஒரோ வழிப் பொருள் நட்டம் முதலிய தோன்றினாலும், தன் மாட்டு அவன் வைத்திருக்கும் அன்புடன் தலைவி இந்த நட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். எனவே, இந்த நட்டம் பெரிதாகப் படுவதே இல்லை. பிறர் அவனுடைய செயலையும் அவன் அழிக்கும் பொருளையும் கண்டு அஞ்சுகின்றனர்; அவளிடங்கூட முறையிடுகின்றனர். ஆனால், அவர்கள் அவனுடைய செயலில் ஒரு பகுதியைத்தான் காண்கின்றனர். அவர்கள் காணாததும் காண முடியாததுமான மற்றொரு பகுதியை அவள் ஒருத்தி மட்டுமே காண முடியும். அந்த மற்றொரு பகுதி தான் அவன் அவளிடம் காட்டும் அன்பு, அவன் காட்டுகின்ற கண்ணால் காணமுடியாத அன்பின் எதிரே அவனுடைய ஏனைய தவறுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. ஆதலால், தான் அவளிடம் கொண்ட அன்பு குறையாமல் அவன் எத்தனைப் பிழைகள் செய்தாலும், அவள் அவற்றைப் பெரிதாக மதிப்பதே இல்லை. இன்றில்லையேனும் நாளை அவன் திருந்திவிடுவான் என்ற உறுதியான நம்பிக்கையில் அவள் மகிழ்ச்சியுடன் வாணாளைக் கழிக்கின்றாள்– நாகரிகம் மிகுந்துவிட்ட குடும்பங்களில் இந்தப் பண்பாட்டைக் காணமுடியாது. காரணம், நாகரிகம் (தற்கால ரகம்) மிகும் பொழுதே போலித்தன்மையும் உள்ளொன்று வெளியொன்றுமாக நடந்துகொள்ளும் இயல்பும் உடன் தோன்றிவிடுகின்றன. எனவே, ஒருவர் மாட்டு ஒருவர் காட்டும் அன்பு, வருத்தம், வெறுப்பு முதலிய அனைத்துமே ஓர் எல்லைக்கு உட்பட்டுப் பிறர் அறியாவாறு காட்டப்படுகின்றன. ஆதலாலே தான் போலி நாகரிகம் மிகுந்த குடும்பங்களில் மேலே கூறிய தலைவி இயல்பை நன்கு காண்டல் இயலாது. ஆனால், போலி நாகரிகம் முற்றாமல் உள்ளத்தே தோன்றும் உணர்ச்சியை மறைக்காமல் வாழ்ந்து வரும்