பக்கம்:அகமும் புறமும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 • அகமும் புறமும்

சமுதாயமும் நாடும் செம்மையடைதல் இயலாதென்பதை நன்கறிந்தமையின், வள்ளுவர் இவ் வழியை மேற்கொண்டார். இக்கருத்துப் பின்னரும் விரிவாக ஆயப்படும்.


குடும்ப வாழ்க்கை மனிதனைச் செம்மைப்படுத்த அவ்வளவு இன்றியமையாததா? ஆம் என்றே கருதினர் பழந்தமிழர்; அதனாலேயே அகத்திற்கு அத்துணை மதிப்புத் தந்தனர். இது ஏன் என்பதைச் சற்று விரிவாகக் காண்போம்.


மனிதன் பிறந்து வளர்வதன் நோக்கம் முழுத்தன்மை (Perfection) அடைவதேயாம். மனிதன் பிறக்கும்பொழுது தன்னலப் பிண்டமாகவே பிறக்கிறான். காட்டு மனிதனாகப் பிறர் உதவியை நாடாமல் வாழ்கின்ற காலத்தில் இதனால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாகரிகம் மிகுந்த சமுதாயத்தின் ஓர் உறுப்பாக அவன் வாழவேண்டிய நிலையில் இத் தன்னலம் ஊறு செய்யும். எனவே, எத்துணைக்கெத்துணை தன்னலத்தை ஒழிக்கிறானோ அத்துணைக்கத்துணை அவன் சிறந்த மனிதனாக வாழ முடியும். முழுத்தன்மை பெற இது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறாயின், தன்னலத்தை உதறித் தள்ள வழி யாது? இல்லறமே சிறந்த வழி. இவ்வாறு கூறுவதால் துறவறத்தை நேரடியாக மேற்கொண்டோர் சிறந்தவர்களாக முடியாது என்பது கருத்தன்று. அவ்வாறு ஆகின்றவர் ஒரு சிலரேயாவர். அன்னார் புறநடையாவரே (Exception) தவிர விதியாகார்.


தலைவனும் தலைவியும்


இல்லறத்தைத் தமிழன் கூறியமுறையில் மேற்கொள்வதால் மனிதன் தன்னலத்திலிருந்து விடுபட முடியுமா? என்பதே அடுத்து வரும் வினா. ஏனைய நாட்டினரைப் போலத் திருமணத்தைக் கூறாமல் தமிழர் அதனைக் ‘களவு’ என்றும் ‘கற்பு’ என்றும் பிரித்தனர். முதலில் களவு