பக்கம்:அகமும் புறமும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 • அகமும் புறமும்

வறுமை என்பதே தலை காட்டாத நாட்டில் அறிவு வளமும், ஏனைய வளங்களும் கொழித்தல் இயல்பு. எலிசபெத்து மகாராணியார் காலத்தில் இங்கிலாந்து செழிப்புற்றிருந்தமையின், பற்பல கவிஞர் தோன்றி வாழ்ந்தனர் எனச் சரிதங் கூறுகிறது. அதேபோலத் தமிழ்நாட்டில் அற்றை நாளில் பல புலவர் தோன்றி வாழ்ந்தனர். காரணமென்ன? புலவனுடைய உயிரும் மனமும் மிக நுண்மையானவை. அவை அடிமை நாட்டில் தோன்றுவதில்லை. ஒரோ வழித் தோன்றினாலும், நிலைத்து வாழ்வதில்லை. கலைஞன் மனம் பரந்தும் விரிந்தும் இருப்பதாகும். அத்தகைய மனநிலையை அடிமையாக வாழ்பவர்கள் போற்றுவதில்லை. குறுகிய மனப்பான்மையும், பிளவுபட்ட மனமுமே அடிமை நாட்டின் அடிப்படை இதில் எவ்வாறு கவிஞன் தோன்ற முடியும்? இன்றைய நிலையில் தமிழனுடைய உயர்ந்த மனப்பான்மையும் குறிக்கோளும் காணப்படவில்லை. தமிழன் பழைய நிலைக்கு வரவேண்டுமானால் நாட்டில் அறிவு வறுமையும் பொருள் வறுமையும் ஒருங்கே தொலைய வேண்டும்.

தமிழ் நாகரிகத் தொன்மை

உலகின் பிற பகுதிகளில் வாழ்நத மக்கள், கூடிவாழும் நாகரிகத்தைக்கூட அடையாத அந்தப் பழைய காலத்திலேயே இத்தமிழர் நாகரிகத்தில் முதிர்ந்திருந்தனர். அப் பகுதிகளில் உள்ளவர்கள் தனித்து வாழ்ந்து வேட்டையாடி உயிர் வாழும் சமுதாய வாழ்வின் அடிப்படையான மருத நாகரிகத்தை அடைந்துவிட்டனர். குறிஞ்சி நாகரிகத்திலிருந்து மருத நாகரிகத்திற்கு வர எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமோ, நாம் அறியோம். அவ்வளவு பழைய காலத்திலேயே இத்தமிழினம் நாடாளும் நாகரிகம் பெற்றுவிட்டது என்பதை உறுதியாகக் கூறலாம். பிற