பக்கம்:அகமும் புறமும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 • அகமும் புறமும்

தலையாக எலிசபெத்தின் வாழ்நாளில் அவள் எத்தனை கையெழுத்துக்களிட்டாள், எத்தனை சூழ்ச்சிகள் நடைபெற்றன என்பன பற்றியே எழுதப்பட்டிருக்கும். இவற்றைப் படித்துவிட்டு இங்கிலாந்து சரித்திரத்தைக் கற்று விட்டதாக நாமும் இறுமார்ந்து நிற்கின்றோம்! என்னே அறியாமை! ஸ்பானியரை வெற்றி கொண்டதற்கு எலிசபெத்து அடைந்த மகிழ்ச்சி பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இலண்டன் போன்ற நகரத்தில் வாழ்ந்த மனிதனும் கிராமத்தில் வாழ்ந்த மனிதனும், ஏழையும் பணக்காரனும், நிலச்சுவான்தாரும் அவன் பண்ணையாளும் இவ்வெற்றி பற்றி யாது நினைத்தனர் என்பதை அறிய விரும்பினால், இச்சரித்திரப் புத்தகம் அதுபற்றி யாதென்றுங் கூறாது. இப்படி ராஜா மந்திரி கதையைத் தேதிவாரி கூறும் சரித்திரம் தமிழர்கட்கு இல்லை என்பது மெய்ம்மைதான். ஆனால், தமிழ் மக்களுடைய வாழ்வைப் படம் பிடிக்கும் சரித்திரம் நிரம்ப உண்டு. இச்சரித்திரம் ஏனைய சரித்திரங்கள்போல உரைநடையில் இல்லாமல், கவிதையில் இருப்பது ஒரு வேறுபாடு. அதிகமாக மன்னர்களைப்பற்றி மட்டும் கூறாமல், பொதுமக்களைப் பற்றியும் பேசுவது இரண்டாவது வேறுபாடு. யாரும் பிறந்த தேதியையோ இறந்த தேதியையோ பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்தது மூன்றாவது வேறுபாடு.

தனிப்பட்டவர் வரலாறு இல்லை

வருடம், மாதம், தேதி என்ற இம்மெய்ம்மை பற்றித் தமிழர் அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தமிழர் தம்முடைய நாகரிகமும் பண்பாடும் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை என்று நினைத்தார்கள் போலும்! தனிப்பட்ட மனிதர் எத்துணைச் சிறப்புடையவராயினும், அவரைப் பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.