பக்கம்:அகமும் புறமும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வரலாறு • 221

அவர்கள் செய்த நற்செயல்களைக்கொண்டே அவர்கள் பெருமையைக் கணக்கிட்டனர். திருக்குறள் என்ற நூல் தமிழன் வாழ்வு, நாகரிகம், பண்பாடு, சமுதாயம் என்பவற்றோடு தனி மனிதனும் சிறப்படைய உதவிற்று என்ற உண்மையை அவர்கள் மறக்கவுமில்லை; மறுக்கவும் இல்லை. ஆனால் திருக்குறளை இயற்றிய ஆசிரியர் இந்நூலை இயற்றியருளியது தவிர வேறு சமுதாயத்திற்கு என்ன உதவியைச் செய்திருத்தல் கூடும்? எனவே, திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு முதலியன பற்றி அப் பழந்தமிழன் ஒன்றுமே குறித்து வைக்கவில்லை. திருக்குறள் செய்த உதவிக்கு நன்றி பாராட்டிய தமிழர்கள், அதற்காக அதனைப் பெருமைப்படுத்திப் பேசிய தமிழர்கள், அதன் ஆசிரியருடைய இயற்பெயரைக்கூட அறிந்துகொள்ளாமலும், குறித்து வைக்காமலும் இருந்ததற்கு இதுவே காரணம் போலும்! நெடுஞ்செழியன் போன்ற வெற்றி வீரர்களையும், கரிகாலன் போன்ற பேரரசர்களையும் பற்றிப் பாடிய பாடல்களிற்கூட அவர்கள் வெற்றியைப் பாராட்டினார்கள். ஆனால், இக்காலச் சரித்திரம் போன்றவை அல்ல இப்பாடல்கள்.

உண்மைச் சரித்திரம்

இன்ன நாளில் இன்ன இடத்தில் இவ்விருவரின் இடையே போர் நடைபெற்றது என்று கவிஞர் குறிப்பதில்லை. அதன் மறுதலையாக, இப்போரினால் இப்பயன் ஏற்பட்டது என்பதை மறைமுகமாகவும், குறிப்பாகவும் வெளியிட்டனர். எனவே, தனிப்பட்டவருடையவும், சமுதாயத்தினுடையவுமான வாழ்வு, தாழ்வு, போராட்டம், எண்ணம், குறிக்கோள் முதலியவை பற்றி அறியவேண்டுமானால், எண்ணற்ற சரித்திரக் குறிப்புகள் உண்டு. தமிழ்ப் பாடல்களில் பத்துப்பாட்டு, எட்டுத்-