பக்கம்:அகமும் புறமும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 • அகமும் புறமும்

இல்லை. மேலும், வனவிலங்குகளும் பாம்புகளுங்கூட அவன் நாட்டில் துன்பஞ் செய்தலில்லை.]

இம்மட்டோ? ஊர்க் காவல் செய்யும் பாதுகாப்புப் படைஞர், நீண்ட வழிகளிலும் கவர்த்த வழிகளிலும் நின்று வியாபாரப் பொருள்களின் போக்குவரத்துக்குத் துன்பம் ஏற்படா வண்ணம் காவல் புரிகின்றனர். அவர்கள் எத்தகையவர்கள்? ஆசிரியர் அவர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்:

கடம்பமர் நெடுவேள் அன்னமிளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காடு.....

(பெரும்பாணாற்றுப்படை 75–78)

[கடப்பம்பூமாலை அணிந்த முருகனைப் போன்ற எஃகுடனும், நீண்ட கைகளும் உடைய (போலீஸ்) வீரர்கள், சுங்கம் வசூலிக்கும் வழிகளிலும் நீண்ட பெருவழிகளிலும் நின்று காவல் புரிகின்றனர்]

அவர்களுட்பலர் அரசனைக் கண்டிராவிடினும், அவன் கொற்றம் நன்கு நடைபெற உதவுகின்றனர். இத்தகைய மாட்சிமையுடைய நாட்டில் தமிழன் வாழ்ந்தான். ஆதலால், அவனது நாட்டில் ஒரு வேலி நிலம் ஆயிரங்கலம் விளைவதாயிருந்தது.

வாணிக எல்லை

இதுவரை கூறியவற்றைக் கொண்டு பழந்தமிழன் பயிர்த் தொழில் ஒன்றுமே கொண்டு வாழ்ந்தான் என்று நினைத்து விடுதலாகாது. அந்நாளில் தமிழ் நாடு வாணிகத்தில் சிறந்த நாடுகளில், தலையாய நாடாயிருந்தது. தமிழரின் வாணிகச் சிறப்பைக் குறிக்கத் தமிழ் நூல்களே-