பக்கம்:அகமும் புறமும்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 229

யன்றி, ஏனைய நூல்களும் சான்று பகரும். பெரிபுளூஸ் (கி. பி. 75) என்ற நூலும், கிரேக்க சரித்திரமும், வேண்டும் அளவு தமிழ் நாட்டின் வாணிகத்தைப் பேசுகின்றன. இன்றும் கொற்கை, காயல்பட்டினம் போன்ற கீழ்க்கடற்கரைப் பட்டினங்களிலும், முசிரி போன்ற மேலைக் கடற்கரைப்பட்டினங்களிலும் பழைய உரோமநாட்டுக் காசுகள் அகப்படுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியான முக்கியப் பொருள்கள்–முத்து, பவளம், மிளகு, உணவுப் பொருள்கள், அரிசி, மயில் தோகை என்பவையாம். இன்றும் கிரேக்க மொழியில் காணப்படும் ‘ருஷ்’ (orydsa) என்ற சொல்லும் ‘துஹ்’ (taos) என்ற சொல்லும் முறையே அரிசியையும், தோகையையுைம் குறிக்கும் வடிவு மாறிய தமிழ்ச் சொற்களாம். கி. மு. 55ல் வாழ்ந்த உரோமாபுரிச் சக்கரவர்த்தியாரான மார்க்கஸ் அரேலியஸ் என்பார், “உரோமர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கையைத் திருப்தி செய்துகொள்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து முத்துக்களை வரவழைக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனுப்பும் பொன் எண்ணிலடங்காது,” எனக் கூறியிருக்கிறார். சிறிது காலம் தமிழ் நாட்டிலிருந்து முத்து இறக்குமதி செய்யப்படக்கூடாதென்ற சட்டமும் உரோமாபுரியில் அமலில் இருந்து வந்தது. இம்மட்டோடு அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நிற்கவில்லை. உயிர்ப் பொருள்களாகிய கிளி, குரங்கு, மயில் முதலியவற்றையும் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். முத்துக் குளிப்பதிலும் சிறந்த முத்துக்களைச் சேகரிப்பதிலும் பாண்டி நாட்டார் உலகப்புகழ் பெற்றவர். பிளினியின் வாக்கின்படி, மரக்காலால் அளந்து மூலைகளிற் குவிக்கும் படியான அவ்வளவு முத்துக்கள் பாண்டி மன்னனிடம் இருந்தன. எல்லா நாட்டினரோடும் தமிழர் வியாபாரஞ் செய்யினும், சிறப்பாக யவனர், கிரேக்கர் இவர்களுடன் தொடர்பு கொண்டு வியாபரஞ் செய்தனர் என அறிகிறோம்.