பக்கம்:அகமும் புறமும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 231

இதனைக் காணலாம். சகடம் என்று கூறப்படும் வண்டிகளில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வணிகர், பல செளகரியங்களை முன்னிட்டுக் கூட்டமாகவே எங்கும் செல்வர். அத்தகைய கூட்டத்திற்குச் சாத்து என்ற பெயரும் வழங்கி வந்துளது. பொருள்களை வைத்து வாணிகஞ் செய்யும் கடைத்தெருவிற்கு அங்காடி என்ற பெயர் காணப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடைவீதியைப் பற்றிப் பட்டினப்பாலையிலும், மதுரை மாநகரின் கடைவீதிச் சிறப்பைப்பற்றி மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களிலும் பரக்கக் காணலாம்.

இறக்குமதியும் ஏற்றுமதியும்

இவற்றுள் ஒன்றை விரிவாக ஆராய்வோம்: மதுரை மாநகரத்து நாளங்காடியைப் பற்றி மதுரைக்காஞ்சி ஆசிரியர் கூறும் வகையால் பழந்தமிழ் நாட்டின் செல்வ நிலை நம்மால் ஒருவாறு அறிய முடிகிறது. ஒரு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களைப் பொறுத்தே, அந்நாட்டின் பொருளாார நிலை இருக்கும். எந்த நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கிறதோ, அந்நாடு வறுமையால் வாட நேரிடும். உதாரணமாக, நமது இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். இன்றைய நிலையில் நம்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம்.

இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோம். உணவுப் பொருள்களை வேற்று நாடுகளிலிருந்து அந்நாடு வரவழைக்கிறது; ஆனால், அதற்குப் பதிலாக இயந்திரங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்கிறது. மேலும், எவ்விதமாகவேனும் தன் பொருள்களைப் பிறர் வாங்குவதற்காகப் பல வழிகளையும் அந்நாடு கையாளுகின்றது. அந்த நாட்டில் இயந்திரங்கள் உண்டு. ஆனால், வெற்று இயந்திரங்களை ஓடவிட்டால் அவை பொருள்களை