பக்கம்:அகமும் புறமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 • அகமும் புறமும்

படுத்தப் பயன்படுவனவே தவிரப் பிறருக்கு எவ்வாறு பயன்படும்? இத்துணைச் சிறப்பும் உடையான் மனத்தில் அன்பு என்பது பிறந்தாலன்றோ அவனால் பிறர் பயன் பெறமுடியும்? இதுவரை தனது நலத்தின்பொருட்டே பிறர் வாழ்கின்றார்கள் என்ற கருத்துடனேதான் அவன் வாழ்கிறான். இன்றேல், பாங்கரும் நண்பருமாய பலர் தன்னைப் புடை சூழ்ந்து வரவேண்டும் என்று அவன் நினைவானா? தலைவியைப் பார்க்கின்றவரை அவன் தன்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் கொண்டுள்ள எண்ணமே வேறு. அவளைப் பார்த்தவுடன் அவனது மனத்தில் முதலில் தோன்றும் எண்ணம் அவள் அழகைப் பற்றியதுதான். அழகைக் கண்டபொழுது அனுபவிப்பதில் தவறு இல்லையாயினும், அவன் அதனைத் தன்னலத்துடனேதான் காண்கிறான். ஆனால், சில நேரத்தில், இவ்வனுபவத்தில் அவன் ஒன்ற ஒன்ற அவனுடைய நிலைமை மாறுபடுகின்றது. தான் என்ற முனைப்புக் கொஞ்சங்கொஞ்சமாகக் கழன்று விட அழகில் தன்னை அடிமைப்படுத்தும் நிலையை அவன் அடைந்துவிடுகிறான். இன்னும் சிறிது நேரம் ஆனவுடன் அவளில்லாம்ல் தன் வாழ்க்கை முற்றுப்பெறாது என்று அறிகிறான்—அல்ல—உணர்கிறான். இப்பொழுது அவனுடைய பெருமையும் மதிப்பும், உரனும், நண்பர் குழாமும், தன்மதிப்பும் பொருளற்ற வெறுங்கூட்டமாய்க் காட்சியளிக்கின்றன அவனுக்கு. முழு வாழ்வின் முதற்படியில் கால் வைத்து விட்டான் தலைவன். இதுவரை தன்னையே முதலாக வைத்து எண்ணிய தலைவன், இனித் தன்னினும் உயர்ந்த ஒரு பொருளைக் கண்டுவிட்டான். அவள் இல்லாமல் தனக்கு வாழ்வு இல்லை என்பதை உணர்ந்த அந்த வினாடியிலேயே தலைவனுக்குப் புதுவாழ்வு பிறந்து விடுகிறது.