பக்கம்:அகமும் புறமும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 233

இரண்டனுள் ஒன்று மிகினும் குறையினும் நாட்டின் செல்வ நிலை இடர்ப்படுவதில்லை. எனவே, எந்த ஒரு நாடு பொருள் வளம் மிக்கு விளங்குகிறதோ, எந்த நாடு தன் தேவைக்குப் பிறர் கையை எதிர்பாராமல் இருக்கிறதோ, அந்த நாடே செல்வநாடு என்று கூறப்படும். மேலே கூறிய கருத்துக்களை மனத்திலிருத்திக் கொண்டு பழைய தமிழ் மதுரையைக் காண்போம்.

மதுரையில் வாணிக நிலவரம்

மதுரையம்பதியை,

‘மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்’

(மதுரைக்காஞ்சி.429)

என்று மதுரைக் காஞ்சி ஆசிரியர் கூறுகிறார். வானை முட்டுங் கட்டடங்கள் உலகின் பலவிடங்களிலும் தம் புகழைப் பரப்பி நிற்கின்றன. கடைத்தெரு மிகவும் அகன்றது. பணியாரம் விற்கும் பாட்டி முதல் மணியும் பொன்னும் விற்கும் பெருங்குடி வணிகர்வரை அனைவரும் நிறைந்துள்ளனர். இவர்கள் விற்கும் பொருள்களைப் பெரிதும் விரும்பி வாங்குகிறவர் வேற்று நாட்டினர் என்பதுந் தெரிகிறது. இங்ஙனம் வந்த வேற்று நாட்டவர் தங்கள் பொருள்களை இங்கு கொணர்ந்து விற்று, அவற்றிற்குப் பதிலாக இப்பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இற்றை நாளில் இங்ஙனம் பெருவாணிகம் நடைபெறுகிற இடங்களில் திடீரென மாறுதல்கள் ஏற்படுவது கண்கூடு. பொருள்களின் விலைகள் திடீரென ஏறியும் இறங்கியும் பலரைப் பெருஞ்செல்வராகவும், ஓட்டாண்டிகளாகவும் செய்தல் நாம் அறிந்ததொன்றே.

ஆனால், இவ்வளவு பெருவியாபாரம் நடந்தும் (வாணிக) நிலை மாறாது இருந்ததாம் மதுரை மாநகரில். இதனை ஆசிரியர் இக்காலப் பொருளாதார சாத்திரத்திற்-