பக்கம்:அகமும் புறமும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 • அகமும் புறமும்

குறிக்கப்படுஞ் சொற்களாற் குறிக்கவில்லை; ஆனால், அதனைவிடச் சிறந்த முறையிற் குறிக்கிறார். வியாபாரப் பெருக்கிற்கு ஓர் உவமை தருகிறார். அவ்வாறு உவமிக்கும் பொருள் கடல் ஆகும். அக்கடலுக்குக் கொடுக்கிற அடைமொழிகளால் முதல்பொருளையுஞ் சிறக்க வைக்கிறார். அதெங்ஙனம் என்பதைக் காண்போம். கடலுக்குப் பல இயல்புகள் உண்டு. அவற்றுள் சிறந்த ஒன்றை அவர் எடுத்தாளுகிறார். கடல் தன்பால் எவ்வளவு நீர் வந்துங் கூட உயருவதில்லை; மேலும், எவ்வளவு நீர் ஆவியாகப் போனாலும் தன்னளவில் ஓர் அங்குலமும் குறைவில்லை. இவ்வியல்பை ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். இவ்வியல்பை மதுரையின் வியாபாரத்திற்கு வைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் கப்பலாகப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்தாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால் மதுரை நகர நாளங்காடி (பகற்கடை) நிலவரம் மாறுபடவில்லையாம். அதாவது, நாட்டின் பொருளாதார நிலையில் வேற்றுமை காணப்படுவதில்லை. இது ஆச்சரியப்படத் தக்கது அன்றோ? ஓர் உவமானத்தால் ஆசிரியர் இந்தப் பொருளாதாரக் கருத்தை விளக்கிக் கூறிவிட்டார். இதோ, பாடலைக் காணுங்கள்:

மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங்காடி

(மதுரைக்காஞ்சி 425–450)

[கரைபொருதிரங்கு முந்நீர்–கரையை மோதி ஒலிக்குங் கடல், கொளக்கொள–வேற்று நாட்டவர் பலமுறை