பக்கம்:அகமும் புறமும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237 • அகமும் புறமும்

சேர்ந்த அலுவலர் வந்து பார்வையிடுகின்றனர்; அவற்றின் மதிப்பை அளவிடுகின்றனர். பொருளின் மதிப்பென்பது எப்பொழுதும் ஒரு நிலையாக இருப்பதில்லை. அங்ஙனம் இருக்கவும் இயலாது. அப்பொருளுக்கு இருக்கும் அவசியத்தைப் (demand) பொறுத்து அதன் மதிப்பும் (Value) மாறுபடும் என்பது நாமறிந்ததொன்று. எனவே, அதன் அவசியத்தை, அப்பொழுதுள்ள நாட்டின் நிலையைச் சீர்தூக்கிப் பார்த்து அச்சுங்க அலுவலர் மதிப்பிடுகிறார்; ஏற்ற முறையில் சுங்கம் விதிக்கிறார்; இங்ஙனம் விதிக்கின்ற முகத்தாலேயே வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்பாடு செய்கிறார். இதனை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். தினந்தோறும் இச்செயல் ஓய்ச்சல் ஒழிவின்றி நடைபெறுகிறது. இதனைச் செய்பவரும் மனத்தாலும் உடலாலும் வலிமை பெற்றவர். அங்ஙனம் சுங்கம் வசூலித்தமைக்கு அடையாளமாக மூட்டைகளின் மேல் சோழநாட்டு இலச்சினையாகிய புலிக் கொடியைப் பொறித்து, அவை மற்ற மூட்டைகளோடு கலந்துவிடாதபடியும், கொடி பொறிக்கப்படாதவை நாட்டினுள் நுழையாமலும் கண்காணித்துக் கொடி பொறித்த மூட்டைகளை மிகவும் காவல் பொருந்திய பாதுகாவலான இடங்களிலும் அடுக்குகிறார்.

வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
 *****
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி

(பட்டினப்பாலை 124–135)

[வைகல்தொறும்–தினந்தோறும்; அசைவின்றி–சோம்பலல்லாமல்; உல்கு–சுங்கவரி]