பக்கம்:அகமும் புறமும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 243

பெரும்பான்மையினர் நடுத்தர மக்களாகவும் ஒரு சிலர் மிகவும் ஏழ்மை வாய்ந்த மக்களாகவும் இருந்தனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இன்றும் இத்தகைய நிலையே தமிழ் நாட்டில் நிலவுகிறது. ஆனாலும், இரண்டுக்கும் எவ்வளவு வேற்றுமை! அன்று இம்மூவகை மக்களுக்கும் இடையே இருந்த மனப்பான்மை இன்று மறைந்தொழிந்தது. மறைந்ததோடு மட்டும் அல்லாமல் வெறுப்பு முதலிய தவறான குணங்களும் நிரம்பிவிட்டன. இதன் காரணம் என்னவென்று ஆராயவேண்டும். நாளாவட்டத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தி அடையாமல் இருக்கப் பழகினார்கள். இயற்கையோடு வாழ்ந்து, எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளுகிற வரையில் திருத்தி மனத்தில் குடிகொண்டிருக்கும்; மனத்தில் அமைதி நிலவும். திருப்தி அடைந்த ஒருவன் மனத்தில் பொறாமை, முதலிய தவறான எண்ணங்களுக்கு இடமில்லை. அதே போலப் பெருஞ்செல்வம் படைத்தவனும், அச்செல்வத்தை வைத்துக் காப்பாற்றி வேண்டியவர்க்கு வழங்கும் பொறுப்பை மேற்கொண்டவனாகத் தன்னைக் கருதினான்; அச்செல்வம் தான்மட்டும் அனுபவிப்பதற்காக ஏற்பட்டதன்று என்று நினைத்தான். எப்போதாவது ஒருவர் இருவர் தவறாக நினைக்க முற்பட்டாலும், அவ்வெண்ணம் தவறானது என்று எடுத்துக்காட்டப் பெரியோர் இருந்தனர். தகுந்த அறவுரைகளால் இத்தகைய மனநிலைகளை அவர் அகற்றினர். உதாரணமாக நக்கீரர் கூறுவதைக் காண்க;


செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறம்–189)

[செல்வத்தின் பயன் பிறருக்குத் தருதலேயாம். அவ்வாறல்லாமல் ‘யாமே அனுபவிப்போம்’ என்று நினைத்துச் சேர்த்து வைத்தால், அது அழிவது உறுதி.]