பக்கம்:அகமும் புறமும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 • அகமும் புறமும்

என்பதே இதன் பொருள். மோர் விற்ற பொருளால் குடும்பத்தைக் காப்பாற்றிய நம் ஆயர் குல மடந்தை, நெய் விற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதை ஆசிரியர் கூறுகிறார்; இன்னது செய்யவில்ல என்றும், இன்னது செய்தாளென்றும் கூறுகிறார். அப்பொருளால் பொன்னை வாங்கவில்லையாம், அதற்குப் பதிலாகக் கறவை எருமைகளையும், பசுக்களையும் வாங்கினாளாம். இங்ஙனம் கூறவேண்டிய இன்றியமையாமை யாது? கறவை மாடுகளை வாங்கினாள் என்று கூறினாலே வேறு ஒன்றும் வாங்கவில்லை என்ற பொருள்தானே பெறப்படுமே! அங்ஙனமிருக்க, இவ்வாறு கூறவேண்டிய காரணமென்ன? இக்காலத் தமிழ்நாட்டில் வாழும் நம்மை இவ்வடிகள் கண் திறந்துவிடுதல் கூடும். எத்தனை கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கம் நமது தமிழ்ச் சகோதரிகள் உடலை அலங்கரிக்கின்றன! ‘தங்கமும் பொருள்தானே? அத்தங்கத்தை வாங்குவதால் நேரும் குறைவென்ன?’ என்று கேட்கலாம். ஆனால், தங்கத்துக்காகச் செலவிடும் முதல் பயனற்ற முதலாகும் (dead capital). முதல் என்றாலே அது மேலும் பொருளைச் சம்பாதிக்கக்கூடியதாகும் என்ற பொருளும் உண்டு. தங்கத்துக்காகச் செலவழிக்கப்படும் முதல் பயனற்றது என்றாலும். இன்று நம் நாட்டில் எத்தனை பெண்மணிகள் இதனை உணர்ந்திருக்கின்றனர்? ஆனால், பழந்தமிழ்ப் பெண்கள் இதனை அறிந்து அனுபவத்திலும் நடத்தினர். அதனாலேயே ஆசிரியர் அவள் பொன்னை வாங்கவில்லை என்று கூறினார். பொன்னை வாங்காமற்கூட இருக்கலாம். அதற்கு மறுதலையாக அப்பொருளைக் கலயத்தில் இட்டு மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் அதைவிடத் தீமையானதாகும். ஆகவே, அம்முதலை வைத்து அதனால் பயன் அடையும் பண்பாடே சிறந்ததாகும். தனது தொழிலுக்கு ஏற்ற முறையில் பயன்படக் கூடியவையான கறவை மாடுகளை வாங்கினாள்; வகையறிந்து, பயன்தரும் வழியில் பொருளை முதலீடு செய்து (Investing) பயன் அடைந்தாள்.