பக்கம்:அகமும் புறமும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 259

பெற்றமையானும், போர்க்களங்கட்குச் செல்லும் பழக்கம் உடைமையானும் அவனது உடல் வலிமை பெற்றிருந்தது. நல்ல உடலுறுதி பெற்றவன் உள்ளமும் பெரும்பாலும் செம்மையானதாய் இருக்கும்; அவன் அறிவும் விளக்கம் உடையதாய் இருக்கும்.

“அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்” (புறம்–20)
“ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை” (புறம்–8)

“பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி” (புறம்–10)

“வேண்டியது விளைக்கும் ஆற்றலை” (புறம்–38)

என்னும் இவ்வடிகள் அரசனது அறிவு மேம்பாட்டை விளக்குவனவாய் உள்ளன.

இத்தகைய அரசன் ஆட்சி முறையில் தன்னேரில்லாதவனாகவே விளங்கினான். அரசன் ஆணைக்கு எதிராக ஒன்றும் நடப்பதில்லை. டியூடர் மன்னர்கள் இங்கிலாந்தில் ஆட்சி செய்கையில், தாங்கள் கடவுளால் ஆட்சி செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று கருதினார்கள். இதனை மக்களும் நம்பி வந்தனர். ஒருவாறு பழந்தமிழ் நாட்டில் இத்தகைய வழக்கே நிலைபெற்றிருந்ததென நினைக்க வேண்டியிருக்கிறது. இறைவன் என்ற சொல்லைக் கடவுள், அரசன் என்ற இருவர்க்கும் வழங்கியமையின் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. பிற்காலத்து ஆழ்வார்,

“திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே”

(திருவாய்மொழி)

என்று கூறியது பழந்தமிழ் வழக்குப் பற்றியதேயாகும். இத்தகைய நிலையில் அவர்கள் இருந்தமையால் ஒரோவழி