பக்கம்:அகமும் புறமும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 • அகமும் புறமும்


தமிழ் மன்னர்கள் பொறுப்பு வாய்ந்த அலுவலைக் கவனிக்கின்ற காரணத்தால் அல்லும் பகலும் கவலைப்படுகின்ற மனத்தை உடையவர்களோ என்று யாரும் ஐயப்படவேண்டா. மனித வாழ்வில் கடமையும், கலையுணர்வும் கலந்து திகழ வேண்டும். அவ்வாறு இல்லையாயின் வாழ்வு முழுத்தன்மை அடையாது. முழுவதும் கடமையாகவே அமைந்துவிட்டால், அது இயந்திர வாழ்வாகி விடும்; முழுவதும் கலையாகிவிட்டால், பயனற்றவாழ்க்கை ஆகிவிடும். எனவே, தமிழ் மன்னர்களுடைய வாழ்வில் கடமை, கலை என்ற இரண்டும் அளவுடன் கலந்தே காணப்பட்டன என்கிறார் புலவர். இதனை இவ்வாறு விரிவாக உரைநடையிற் கூறவில்லை; கவிதையில் குறிப்பாகப் பெறவைக்கிறார். ஒரே அரசனுடைய காலில் வீரக்கழலும் மார்பில் சந்தனமும் விளங்குகின்றனவென்று கூறும் பொழுது கடமையும் கலை உணர்வும் வெளிப்படக் காண்கிறோம்.

அரசனுக்கு ஏற்ற வீடு

கலையுணர்வுடனும் கடமையுணர்வுடனும் வாழ்ந்த பழந்தமிழ் அரசர்கள் பொது வாழ்வின் கடமை நெருக்கடிக்கு எப்போதும் இரையானார்கள். இதனை ஈடுசெய்யப் போலும் தமிழ்ச்சமுதாயம் தமிழ் மன்னருக்கு வளப்பமான தனி வாழ்க்கை தந்து வந்தது. பத்துப் பாட்டுள் ஒன்றான ‘நெடுநல் வாடை’ என்ற பாடலில் இதுபற்றிப் பேசப்படுகிறது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த பழந்தமிழ் மன்னருள் ஒருவன். அவ்வளவு சீரும் சிறப்பும் உடைய ஒருவனுக்கு அரண்மனை கட்ட முடிவு செய்தனர். ‘இடம்பட வீடு எடேல்’, என்ற முதுமொழி அவனுக்கு அன்று; ஆதலால் பெரிய முறையில் அரண்மனை அமைக்கப் பெறுகிறது. ‘பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து’ என்று