பக்கம்:அகமும் புறமும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 • அகமும் புறமும்

நிற்பன இரட்டைக் கதவுகள். வாயிலின்மேலே இலக்குமியின் சித்திரம் அமைந்திருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இரண்டு செங்கழுநீர்ப்பூவும் இரண்டு பெண் யானைகளும் செதுக்கப்பெற்றுள்ளன. இரட்டைக் கதவுகள் எவ்வாறு அமைந்துள்ளன? நன்கு செதுக்கப் பெற்று, இழைக்கப்பட்டு, ஒன்றற்கொன்று இடைவெளி இன்றிச் சேர்க்கப்பெற்று உள்ளன.

‘கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து’

(நெடுநல்வாடை–35)

உள்ளன என்பதால் இதனை அறிகிறோம், ஒரோ வழிக்காய்ந்த மரமாய் இருப்பினும், வெயில் மழை முதலியவற்றால் நாளாவட்டத்தில் இடைவெளி வருதல், கண்கூடு. இதனையும் நீக்க வாயிலிலும் கதவிலும் வெண் சிறுகடுகை அரைத்து அப்பியுள்ளனர் அக்காலத்தச்சர்.

இதனைத் தாண்டி உட்சென்றால் மணல் பரப்பிய பெருமுற்றம் காணப்படுகிறது. ஒரு புறத்தே குதிரைப்பந்தி அமைந்திருக்கிறது. இதனை அடுத்துள்ளது அரண்மனையின் முற்பகுதி. பெரிய கட்டடங்களின் மேற்றளத்தில் விழும் மழைநீர் கீழே வந்து விழச் சரியான வசதி இல்லையானால் கட்டடம் பழுதுபடுமன்றோ? அரண்மனையின் முகப்பில் நிலா முற்றம் அமைந்துள்ளது. அதனையே இன்று நாம் (Portico) போர்ட்டிகோ என்று கூறுகிறோம். இத்திறந்த இடத்தில் விழும் மழைநீர் வந்து விழுவதற்கு ஒரு வாய் அமைத்துள்ளனர். அது மகர மீனின் வடிவம் பெற்று விளங்குகிறது. இன்னும் உள்ளே சென்றால், ‘பல்வேறு பள்ளி’ என்று கூறப்பெறும் பல பெரிய அறைகள்–உள்ளன.

பூச்சு வேலையும் பூ வேலையும்

இந்த அறைகள் சூரிய ஒளி உள் வரும்படி அமைக்கப் பெற்றுள்ளன. இரவிலும் ஒளி நிறைய வரும்படி ஏற்பாடு