பக்கம்:அகமும் புறமும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 271


படையைப் போற்றல்

பரம்பரை உரிமையாற்பெற்ற இவ்வரசைத் தமிழ் மன்னர் தமது வீரம் ஒன்றையே துணையாகக் கொண்டு ஆண்டு வந்துள்ளனர். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னும் மன்னனுடைய வலிமையைப் பாட வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், நல்ல உவமை ஒன்றைத் தந்து அவனுடைய வலிமையை விளக்குகிறார்.

‘ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும் உடையோய்!’

(புறம்–2)

எனக் குறிப்பிடுகிறார். இப்பூதங்கள் உலகம் நன்கு வாழ உதவுகின்றன. என்றாவது இவ்வுலகம் தனது நிலைமை மீறிச் செல்லுமாயின், இதனை அழிக்கின்றன. அதே போலத் தமிழ் மன்னர்கள் பிற அரசருக்கும் வாழ உரிமை தந்து தாமும் வாழ்ந்தனர்; என்றாவது அப்பிறர் உரிமை மீறி வாழத் தொடங்கினால், அவரை அழித்தனர். அழிப்பதற்கு உரிய மனவன்மை, உடல் வன்மை, படைவன்மை என்ற மூன்றையும் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிகிறோம். காலன் கூடக் காலம் பார்த்தே கொல்லுவான். ஆனால், இவ்வரசர் காலங்கருதாதுகூட வெல்லும் ஆற்றல் உடையவர் என்றுங் கூறப் பெறுகின்றனர். இத்தமிழ் வேந்தர் ‘நால்வகைப் படையுடன் மாட்சிமைப்பட்ட’ அரசை நடாத்தினர் என பாடல்கள் மிகுதியும் தெரிவிக்கின்றன. போர் என்றவுடன் தோள்கள் வீங்கும் மறக்குடி மக்களை வீரர்களாகப் பெற்றிருந்தனர். அரசன் படையைத் தன் கண்போல் மதித்து நடத்தினான் என்ற உண்மையை படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் என்று கூறும் வள்ளுவர் வாய்மொழி தெரிவிக்கிறது. படைகளால் தாம் பெறும் வெற்றியை நன்கு உணர்ந்தவர்களாதலின், அப்படைகட்குச் சிறு சோற்று