பக்கம்:அகமும் புறமும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 • அகமும் புறமும்

விழா (Tea Party) பெருஞ்சோற்று விழா (Dinner) முதலியன நடத்தி அவர்கட்கு எழுச்சி ஊட்டி வந்தனர் என்றும் அறிய முடிகிறது. சாவைப் பெறற்கு அரிய பேறாகக் கருதிய தமிழ் வீரர்களைப் பெற்றிருந்த இம்மன்னர்கள் ஓயாது போர் இட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

மனவலி

இத்தகைய படைவலி உடைய இம்மன்னர்களின் மன வலியும் கண்டு மகிழற்குரியது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனை எழுவர் சேர்ந்து எதிர்த்தனர். அவனோ, சிறுவன். ஆனால், மனவலியால் அவ்வெழுவரினும் மேம்பட்டவன். போர் மூண்டுவிட்டது என்று அறிந்த அப்பெருந்தகை வஞ்சினம் கூறுகிறான். எவ்வாறு?

‘எழுவரையும் அருஞ்சமம் சிதையத்தாக்கி
முரசமோடு ஒருங்கு அகப்படேன் ஆயின்

(புறம். 72)

‘யான் இவ்விவ்வாறு போவேனாக!’ என்று அவன் கூறுவதால் அவனுடைய உறுதி வெளிப்படுகிறது. இத்தகைய மனவலி படைத்தவர்கள் அரசராயிருந்த காரணத்தாலேதான் வீரர்களும் அத்தகையவர்களாய் இருந்தார்கள். இவர்களின் நெஞ்சு உரத்தை நன்கு அறிந்த வள்ளுவர்,

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

(குறள்-774)

என்பது போன்ற குறள்களால் இவ்வீரர்க்குச் சாவா வரந்தந்துவிட்டார்.