பக்கம்:அகமும் புறமும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 277

இல்லாத காரணத்தாலோ, என்னவோ தவறு இழைத்து உள்ளனர். பகைவருடைய நாட்டையும் அரணையும் அழித்து அவர் நிலங்களில் கழுதை பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுவித்தலையும் (புறம். 15) ஒரு பாடலில் கேட்கத்தான் செய்கிறோம்.

கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழாக,
ஏம நன்னாடு ஒள் எளி ஊட்டினை

(புறம். 16)

என்பது போன்ற பாடல்கள் மிக மிகச் சிலவே. தொகையாகச் சேர்க்கப் பெற்ற புறம் போன்ற நூல்களில் இத்தகைய பாடல்கள் ஒன்றிரண்டு காணப்படுதலான் ஓர் உண்மை நன்கு விளங்கும். அற்றை நாளில் தமிழ் மன்னர் இருந்த நிலையை உள்ளவாறு விளக்கவேண்டும் என்ற காரணத்தால் பொய் அறியா நன்மாந்தர் வேண்டும் என்றே இத்தகைய பாடல்களைச் சேர்த்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான மன்னர் மிகச்சிறந்தவராய் இருந்தனர் என்பதும், ஒரு சிலர் தவறான வழியில் சென்றனர் என்பதும் அறிய முடிகிறது. மற்றொரு வகையில் நோக்குமிடத்து இதைப் பெருந்தவறு என்றும் கூறுவதற்கில்லை. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்கள் போரில் தோற்றாரைத் துன்புறுத்தலினும் அவர் நாட்டை எரி ஊட்டலினும் தவறு ஒன்றும் இல்லை என நினைத்திருக்கலாம் அல்லவா? எரியூட்டல் முதலிய செயல்கள் நாகரிகம் முதிர்ந்ததாகக் கருதப் பெறுகிற இற்றை நாளிலும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் ஒன்றுதானே? இற்றை நாள் மேலை நாட்டார் நாகரிகத்துடன் ஒப்பிட்டால் இச்செயல்கள் தவறுடையன எனக் கூறுவதற்கில்லை. ஆனால், ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்ற பழந்தமிழன் பண்பாட்டோடு ஒப்பிட்டால், தவறுடையதுதான் என்பதில் ஐயமில்லை.