பக்கம்:அகமும் புறமும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280 • அகமும் புறமும்


மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம்
குடிபுரவு உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்.

(சிலம்பு25 : 100-104)

(மழை குறைந்தாலும், உயிர்கள் துன்புற்றாலும் மன்னன் கொடுங்கோலனென்று துாற்றப்படுகிறான். ஆதலின், மக்களைக் காக்கும் மன்னர் குடிப்பிறத்தலினும் துன்பம் வேறு இல்லை)

என்று அரசர் குடியிற்பிறந்த இளங்கோவடிகளே குறிக்கின்றார். எனவே, மன்னனாய்ப் பிறந்த ஒருவன் மன அமைதியோடு உறங்குகிறான். எனில், அதில் பெரியதோர் உண்மை இருத்தல் வேண்டும். இக்காலத்தில் அமெரிக்கா போன்ற நாகரிகமும் பணமும் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் ‘உறக்க மாத்திரைகள்’ பயன்படுத்தினால் ஒழிய உறங்க முடிவதில்லை என்பதை அறிகிறோம்.

இவை அனைத்தையும் மனத்திற்கொண்டு மதுரைக் காஞ்சியார் கூறிய ‘திருந்து துயில்’ என்ற சொற்களைக் காண்போம். ‘திருந்து’ என்ற அடைமொழியைத் துயிலுக்கும் ‘இனிதின்’ என்ற அடைமொழியை எழுந்து என்ற சொல்லுக்கும் பெய்து பாடுகிறார் ஆசிரியர். இக்காலம் போன்று பயனின்றி அடைமொழி தந்து பாட மாட்டார்கள் சங்கப் புலவர்கள். அவ்வாறு மிகுதியான சொற்கள் காணப்பட்டால், அங்கு நின்று ஆய வேண்டும். ‘திருந்து’ என்றும் ‘இனிதின்’ என்றும் கூறும்பொழுது ஆசிரியர் ஏதோ ஒரு பெரிய கருத்தைத் தெரிவிக்கின்றார். துயிலைத் திருந்து துயில் என்று குறிப்பிடுவதால், மனக் கவலையின்றி