பக்கம்:அகமும் புறமும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 • அகமும் புறமும்


இதனையடுத்து, ‘இனிதின் எழுந்து’ என்று வரும் சொற்களும் ஆய்தற்குரியன. விடியற்காலை எழும்பொழுது நம்மில் எத்துணைப் பேர்கள் மன நிறைவுடனும் சிரித்த முகத்துடனும் எழுகின்றோம்? இவ்வாறு எழவேண்டுமாயின், இரவு நல்ல முறையில் உறங்கி இருத்தல் வேண்டும். எனவே, இனிய முகத்துடன் மன்னன் எழுந்தான் என்று ஆசிரியர் கூறும்பொழுது அம்மன்னனுடைய வாழ்வையும் பண்பாட்டையுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். தெளிந்த மனத்துடன் எழும் அம் மன்னன் நன்கு கடமையாற்றத் தயாராகிவிடுகிறான்.

வழிபாடு

இவ்வாறு எழுந்தவுடன் அம் மன்னன் படுக்கையில் இருந்தபடியே அன்றாடம் ஆற்றிமுடிக்கவேண்டிய கடமைகளைப் பற்றிச் சிந்திக்கிறான். பழந்தமிழர் போற்றிச் செய்து வந்த இச்செயலைப் பிற்காலத்தெழுந்த ஆசாரக் கோவை என்ற நூல் அனைவருக்கும் உரிய கடமையாக வகுக்கின்றது.

‘வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல் அறனும் ஒண்பொருளும் சிந்தித்து’

(ஆசாரக்கோவை)

என்று கூறும் அடிகளில், இக் கடமை முடிந்தவுடன் அரசன் நீராடிவிட்டு உடையுடுக்கிறான்; அடுத்துக் கடவுட் பூசையில் ஈடுபடுகிறான்.

வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி

(மதுரைக்காஞ்சி–723.724)

என்ற மதுரைக் காஞ்சி அடிகள் அவன் செய்யும் இச்செயலையும் நமக்கறிவுறுத்துகின்றன. பின்னர் உணவுண்டு,