பக்கம்:அகமும் புறமும்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 283

நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைப் பூசி, பெரிய முத்து மாலையை அணிகின்றான். ஒளி பொருந்திய ஏனைய மணிமாலைகளுடன், மலர் மாலையையும் அணிகின்றானாம்; கைவிரல்கள் நிறைய மணிகள் அழுத்தின மோதிரங்களையும் அணிகின்றானாம்; இத்தனைக்கும் மேலாக அன்றாடம் சலவை செய்யப்பெற்ற உடைகளை அணிகின்றானாம். துணிகட்குக் கஞ்சியிட்டுச் சலவை செய்தல் இக்கால வழக்கம் என்று யாரும் நினைத்துவிட வேண்டா. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் நாட்டில் மன்னர்கள் இதனையே அணிந்தனர் என்பதைச்

“சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்”

(மதுரைக்காஞ்சி–721)

என்ற அடியால் அறியலாம்.

உடைச் சிறப்பு

இத்துணை அலங்காரங்ளுடன் காலை நேரத்தில் மன்னன் காட்சி தருகின்றான். ஆங்கிலர் ஆட்சித் தொடக்கம் வரையில் நிலை பெற்றிருந்த இந்திய நாட்டின் உடைச் சிறப்புத் தமிழ் நாட்டில் தொடங்கியதெனக் கூறலாம். அற்றை நாளில் தமிழ் நாட்டில் நெய்யப்பெற்ற மெல்லிய துணிகட்கு என்ன பெயர்கள் தந்தார்கள் என்று கூற முடியாவிடினும், ‘டாக்கா மஸ்லின்’ போன்றிருந்தன அவை என்று மட்டும் கூற முடியும். பழந்தமிழ் மன்னர்களும் பிற செல்வர்களும் உடுத்த உடைகள் எவ்வாறிருந்தன என்பதை அவர்கள் பாடலில் தோன்றும் உவமைகளால் மட்டுமே அறிய முடிகிறது. உடைகளைப் பற்றிய சில குறிப்புகள் அறியற்பாலன.

“புகைவிரிந் தன்ன பொங்குதுகில்” (புறம். 398)
“ஆவி நுண்துகில் யாப்புறுத்து” (பெருங்கதை 136–64)