பக்கம்:அகமும் புறமும்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 289

அவ்வாறு நுழைபவர் தம்முடைய உணர்ச்சிகட்கு இடந்தந்து பேச முற்படுவாராயின், அரசனுக்கு அதனால் நடுவு நிலை நீங்க நேரிடும். எனவே, செய்தி கூற வருபவர், தாம் வந்த காரியத்தை உடனே கூறாமல், அவனைப் பல படியாக வாழ்த்திவிட்டுத்தான் கூறவேண்டுமெனில், வந்த உணர்ச்சி வேகத்தில் பாதியை இழந்துவிடுவர். இவ்வகையான ஒரு நலத்தையும் இவ்வாழ்த்து முறை தருதலைக் காணலாம். பழந்தமிழ் மன்னர் அவைக்களம் முழுவதிலுமே இப்பழக்கம் இருந்துவந்ததென்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

வணங்கிய தலையர்

அவையுள் அரசனைக் காண வருபவர் இவ்வாழ்த்தை வாயினாற் கூறுவதோடன்றிச் செய்யவேண்டிய செயல்கள் சிலவும் உண்டு. அவற்றை அறியப் பெருங்கதை உதவுகிறது. “பிரச்சோதன மன்னன் கணக்கர்களையும், அரசன் கருவூலத்தைக் (பொக்கிஷம்) காப்பவரையும் அழைத்து வர ஏவுகின்றான். இவ்விரு கூட்டத்தாரும் அரசவையுள் நுழையும்பொழுது முழங்காலிவிட்டு, போர்வையாகிய மேலுடையை மடக்கிக்கொண்டு, நிலம் தொட்டு வீழ்கின்ற தம் உடையை மடக்கிக்கொண்டு, வணக்கஞ் செலுத்திக் கொண்டு, அண்ணாந்து அரசனைக் காணாமல், குனிந்த படியே அவன் ஏவலைக் கேட்டனர்,” என்று அந்நூல் கூறுகிறது.


கணக்கரை வியன்கரக் கலவரைக் காக்கும்
திணைத்தொழி லாளரைப் புகுத்துமின் ஈங்கெனப்
புறங்கால் தாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்வு உடுத்த நெடுநுண் ஆடையர்
தானை மடக்கா மான மாந்தர்
அண்ணாந்து இயலா ஆன்றுபுரி அடக்கத்துக்
கண்ணி நெற்றியர் கைதொழுஉப் புகுதர

(பெருங்கதை 1:62–67)