பக்கம்:அகமும் புறமும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 291

ஆம்! ஔவையும், வெள்ளிவீதியும், ஒக்கூர் மாசாத்தியும் பிறந்த தமிழ்நாட்டில் பெண்கட்கு மதிப்புத் தருதலும், சமஉரிமை தருதலும் இயல்பே அன்றோ? இத்துணை உரிமைகளை மகளிர்க்கு அளித்திருந்தும், வருந்தத்தக்க ஒரு நிலையாதெனில், இம்மன்னர்களனைவரும் பலதார மணஞ்செய்து கொண்டவர்களாகவே இருந்தனர். பெருங்கதை போன்ற காப்பியங்கள் இவர்களை ஆயிரக் கணக்கில் கூறுவதைக் காணலாம்.

காணிக்கை

அரசனை அவையிற்சென்று காண்போர் காணிக்கையாகச் சில பொருள்களைக் கொண்டு சென்று காண்டல் மரபாகும். இப்பொருளைப் பண்ணிகாரம் (3.18.24) என்ற சொல்லால் குறிக்கிறது பெருங்கதை. செல்பவர் தகுதிக்கேற்பவும், அவர் வேண்டும் குறைக்கு ஏற்பவும் உயர்ந்தனவும் சாதாரணமானவும் ஆன பொருள்களைக் கொண்டு செல்லல் மரபு. சேரன் செங்குட்டுவன் மலை வளங் காணச்சென்று தங்கிருந்த பொழுது மலைவாணர் மலைபடு பொருள்களைக் கொணர்ந்து தந்து அவனை வழிபட்டமையைச் சிலப்பதிகாரம் விரிவாகப் பேசுகிறது. (சிலம்பு 25, 36—55)

அவையே நீதி மன்றம்

பழந்தமிழ் மன்னனுடைய அவை நீதிமன்றமாகவும் இருந்தமையைக் கண்ணகி வழக்குரைத்தல் மூலம் கண்டோம். பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியை நோக்கிப்,


பெண் அணங்கே, ...
கள்வனைக் கோறல் கடுங்கோலன்று!
வெள்வேல் கொற்றம் காண்!

(சிலம்பு 20:63)